தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அணைக்கட்டு தூர்வாரப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து மேல் பகுதியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணைக்கட்டு தூர்வாரப்பட்டது. இந்நிலையில் அணைக்கட்டு தூர்வாரும் பணியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து அணைக்கட்டு தூர்வாரும் பணி இடையில் நிறுத்தப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதியில் வைத்து காணும்பொங்கலை சிறப்பாக கொண்டாடி வந்தனர். ஆனால் அணைக்கட்டுக்கு கீழ்ப்பகுதியில் முற்செடிகள் ஆக்கிரமிப்பால் நாளடைவில் அந்த விழா மறைந்தது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் முயற்சியால் மீண்டும் அந்த பகுதி தூய்மை செய்யப்பட்டது. அதனால் இந்த ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் இந்த அணைக்கட்டுப்பகுதியில் காணும்பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இதற்கிடையில் காணும்பொங்கல் பொங்கல் கொண்டாடப்படும் பகுதியினை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் அணைக்கட்டு அருகில் மிகப்பெரிய அளவில் பூங்கா அமைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் உதவி மாவட்ட ஆட்சியர் பயிற்சி லாவண்யா பூங்கா அமைக்க உள்ள இடத்தினை பார்வையிட்டார்.
இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் பூங்கா அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டார். அதன்பின்னர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியினை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம் அணைகட்டு பகுதியில் பெரும் முயற்சியினால் தூய்மை பணி நடந்தது. இந்த பகுதியில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் மிகப்பெரிய அளவில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி மாபெரும் உணவுத்திருவிழா நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்தார். அவருடன் உதவி மாவட்ட ஆட்சியர் லாவண்யா, ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் வந்திருந்திருந்தனர்.