பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 4000 கன அடி நீர் வீணாக வெளியாகி கடலில் கலக்கிறது-.
தாமிரபரணி நதியை பொறுத்தவரை ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் தண்ணீர் வீதம் ஒரு நாளைக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் மக்களுக்கு தருகிறது.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் மொத்தம் 7 தடுப்பணைகள் உள்ளது. இதில் 5 அணைக்கட்டுகள் திருநெல்வேலி மாவட்டத்திலும், 2 அணைக்கட்டுகள் தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ளது. இந்த தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும், அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும் பெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்த இரண்டு அணைக்கட்டுகளும் மிக முக்கியமான அணைக்கட்டுகள். மருதூர் அணைக்கட்டில் மருதூர் மேலக்கால், கீழக்கால் உள்ளது. அதே போல் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் வடகால் மற்றும் தென் கால் உள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வருடம் தோறும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு வரும் போது வினாடிக்கு பல ஆயிரக்கணக்கான அடி தண்ணீர் வீனாக கடலில் கலக்கும் அவல நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தாமிரபரணி ஆற்றில் மருதூர் மேலக்காலில் இருந்து சடையநேரி என்ற கால்வாய் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சீரமைக்கப்பட்டது. இதன் மூலமாக மருதூர் மேலக்காலில் அதிக அளவில் தண்ணீர் வரும் போது தென்பகுதியில் வறட்சியாக உள்ள பகுதியான சாத்தான்குளம், புத்தன்தருவை, வைரவன் தருவைகளுக்கு இந்த சடையநேரி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் தற்போது இந்த சடையநேரி கால்வாய் முறையாக சீரமைக்கப்படாததால் இந்த தண்ணீரானது வீணாக கடலில் கலக்கிறது. எனவே இந்த தண்ணீரை முறையாக சேமிக்க சடையநேரி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருதூர் கால்வாயில் 1000 கன அடிநீர் வரை மட்டுமே தண்ணீர் மருதூர் அணையில் இருந்து எடுக்க முடியும். இதற்கு பின்னர் பிரியும் இந்த சடையநேரி கால்வாய்க்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்படும். ஆனால் சடையநேரி கால்வாய் பராமரிப்பு இல்லாத காரணத்தால் அதிக அளவு தண்ணீர் திறக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கே உள்ள பகுதிகளுக்கு இந்த தாமிரபரணி தண்ணீரை கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் இருந்து தடுப்பணை கட்டப்பட்டு அதன் மூலமாக கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திக்குளம் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பணிகளையும் விரைவில் துவங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருடம் தோறும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரும் போது வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை முறையாக சேமித்து வைத்து விவசாயிகளுக்கு பயனுள்ளதாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


