தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்டிய சீட்டப்பணத்தை மோசடி செய்ததாக இன்று ஸ்ரீவைகுண்டம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில்,
மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வரும் நான் உட்பட நாங்கள் சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் ஸ்ரீவைகுண்டத்திலேயே வசித்து வருகிறோம்.
நாங்கள் அனைவரும் ஸ்ரீவைகுண்டம் சிவன் கோவில் தெருவில் ”ஸ்ரீ சண்முகா சிட்பண்ட்” என்ற பெயரில் சீட்டுக்கம்பெனியை சொந்தமாக நடத்தி வந்த சிதம்பரம்&சிவகாமி தம்பதியரின் மகன் பாலாஜி அவரது மனைவி சுலோச்சனா அவர்களிடம் சீட்டு சேர்ந்து பணம் செலுத்தி வந்தோம்.
சீட்டுக்கான பணத்தை நாள்தோறும் ரூ.200, ரூ.300 என்ற விகிதத்தில் தினம் தோறும் செலுத்தி வந்தோம். இந்த தொகை செலுத்துவதற்காக சீட்டு கம்பெனி சார்பில் எங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள நோட்டில் முறையாக வரவும் வைக்கப்பட்டுள்ளது. இப்படியாக நாங்கள் ஒவ்வொருவரும் கடந்த நான்கு வருடத்தில் எங்களுக்கான சீட்டுத்தொகை கணக்கின்படி ரூ. ஒரு லட்சம், ரூ. இரண்டு லட்சம், ரூ. மூன்று லட்சம் என்ற விகிதத்தில் சீட்டுக்கான பணத்தை செலுத்தி வந்தோம்.
சீட்டு சேர்ந்துள்ள அனைவரும் சீட்டுக்கான பணத்தில் குறைந்தது 90சதவீதம் செலுத்தி விட்டோம். இன்னும் சில மாதங்களில் சீட்டு முதிர்வடைந்து அனைவருக்கும் சீட்டுத்தொகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தோம். இந்நிலையில், சீட்டுக்கம்பெனியை நடத்தி வந்த பாலாஜியும், அவரது மனைவி சுலோச்சனாவும், மாமியார் முருகன், மாமியார் ராணி ஆகியோர் கடந்த 1ம் தேதி அன்று நள்ளிரவில் தங்களது குடும்பத்தினருடன் திடீரென்று தலைமறைவாகி விட்டனர்.
நாங்கள் அனைவரும் தினமும் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைத்த பணம் அனைத்தும் அவர்களின் கைவசம் தான் இருக்கிறது. மொத்தத்தில் சீட்டு சேர்ந்த அனைவருமாக சேர்த்து பார்த்தால் குறைந்தது சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இதுவரை கட்டி இருக்கிறோம். தற்போது நாங்கள் அனைவரும் எங்களது பணத்தை இழந்து நிர்கதியாகியுள்ளோம்.
எங்களிடம் ஆசை வார்த்தை கூறி சீட்டுக்கம்பெனியில் சேர வைத்து சீட்டுப்பணம் முழுமையாக செலுத்திய நிலையில் எங்களது பணம் ஒரு கோடியை மோசடி செய்து சென்ற ஸ்ரீசண்முகா சிட்பண்ட் உரிமையாளர் பாலாஜி, அவரது மனைவி சுலோச்சனா, தந்தை சிதம்பரம், தாயார் சிவகாமி, மாமனார் முருகன், மாமியார் ராணி ஆகிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களது சீட்டுப்பணத்தை மேற்படி நபர்களிடம் இருந்து முழுமையாக மீட்டுத்தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த புகார் மனுவில் தெரிவித்தனர்.
இதுகுறித்து டிஎஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஸ்ரீவைகுண்டத்தில் சீட்டு பணம் மோசடி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


