தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் கிராம உதயம் இணைந்து நடத்திய தமிழ் புத்தாண்டு சித்திரை திருவிழா இன்று மாலை ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டுப்பகுதியில் நடந்தது.
இவ்விழாவில், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பாரம்பரியம்மிக்க சைவம் மற்றும் அசைவ உணவுப்பொருட்களும், மகளிர் குழுவினரின் தயாரிப்புகளான கைவினைப்பொருட்கள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான பொருட்களை பொதுமக்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கிட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும்,செல்லப்பிராணிகள் கண்காட்சியாக பல்வேறு வகையான உயர்ரக நாய்களின் சிறப்பு கண்கவர் அணிவகுப்பும் நடந்தது.
இதனைத்தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரியம்மிக்க சிலம்பாட்டம், நோய்களை போக்கி நல்வாழ்வு தரும் யோகா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ&மாணவியர்களின் கிராமப்புற கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், ”எரிபொருள் சேமிப்பு, சாலைவிதிகளை மதித்தல், தேசப்பற்று” போன்றதை பொதுமக்களுக்கு எடுத்துரைத்திடும் வகையில் மாணவர்களின் விழிப்புணர்வு பிரமீடு வடிவிலான கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், சப்&கலெக்டர் பிரசாந்த் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் பேரூராட்சி நிர்வாகத்தினர், அரசுத்துறையினர், கிராம உதயம், வியாபாரிகள் சங்கத்தினர், தன்னார்வலர்கள், செல்லப்பிராணி வளர்ப்பர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து தமிழ் புத்தாண்டான சித்திரை வருடப்பிறப்பை சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீவைகுண்டத்தில் முதல் முறையாக நடைபெறும் உணவுத்திருவிழாவில் ஏராளமான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
உணவுத்திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சகாயஜோஸ் மேற்பார்வையில், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சப்&இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், முருகபெருமாள், முத்துபட்டன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.