ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆறு திருமஞ்சன படித்துறையில் நடைபெற உள்ள புஷ்கரவிழா நிகழ்விடத்தை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா, தண்ணீரில் ஆழம் அதிகமிருப்பதால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள மகா புஷ்கர விழாவிற்கான ஆயத்தப்பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இதன்படி, ஸ்ரீவைகுண்டத்தில் திருமஞ்சன படித்துறையை மகா புஷ்கர விழா நடைபெறுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் ஆரத்தி பூஜை, பௌர்ணமி பூஜை, அம்மாவாசை பூஜை என சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அக்.11ம் தேதி முதல் அக்.23ம் தேதி வரை நடைபெறும் மகா புஷ்கர விழாவில் லட்சக்கணக்காண மக்கள் பங்கேற்க உள்ள நிலையில், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐ.ஜீ மாசானமுத்து தலைமையிலான மகா புஷ்கர விழா கமிட்டியினர், வியாபாரிகள் சங்கத்தினர்கள், மக்கள் நலச்சங்கத்தினர்கள் ஒன்றினைந்து கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்விடம் வனத்துறைக்கு உட்பட்ட பகுதி என்பதால் கருவேல மரங்களை அகற்ற வனத்துறையினர் தடை விதித்தனர். இதைதொடர்ந்து வனத்துறையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என வியாபாரிகள் சங்கத்தினர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திரன் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினரின் மேற்பார்வையின் கீழ் இருதினங்களுக்கும் கருவேல மரங்களை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.
இருதினங்கள் முடிவுற்ற பின்னரும் கருவேல மரங்களை அகற்றும் பணி முடிவடையவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம்(செப். 25) கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு வனத்துறையினர் மீண்டும் தடை விதித்தனர்.
இதை தொடர்ந்து, வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், சட்ட ஆலோசகர் முத்துராமலிங்கம் ஆகியோர் வனத்துறையினரிடம் பக்தர்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களை பாதுகாக்கவும் கருவேல மரங்களை முழுவதுமாக அகற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்&இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் உள்ளிட்ட போலீசார் பேச்சு வார்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கருவேலமரங்களை அகற்றும் பணி மீண்டும் தொடங்கியது. பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் தலைமையிலான பணியாளர்கள் தூய்மை படுத்தும் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மகா புஷ்கர விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பலஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆறு திருமஞ்சன படித்துறையில் நடைபெற உள்ள புஷ்கரவிழா நிகழ்விடத்தை மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்பொழுது, வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்பன், மக்கள் நலச்சங்க ஒருங்கினைப்பாளர் வக்கில் ரமேஷ், சமூக ஆர்வலர் சந்துரு ஆகியோர், மாக புஷ்கர விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர்.
அவர்களிடம், திருமஞ்சனப் படித்துறை பகுதியில் தண்ணீரின் ஆழம் அதிகமிருப்பதால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா தெரிவித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்&இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள், மண்டல துணை தாசில்தார் சுந்தரராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.