தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தமிழக துணை முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆன்மிக சிறப்புபெற்ற நகரமாக திகழ்ந்துவரும் ஸ்ரீவைகுண்டத்தில் தாலுகா அலுவலகம், துணை காவல்கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல்நிலையம், தீயணைப்பு நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு பொது தலைமை மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய&மாநில அரசுகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகே நீதிமன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள் தற்போது மிகவும் பழுதான நிலையில் காட்சி அளித்து வருகிறது. மேலும், நீதிமன்றவளாகத்தில் வழக்கறிஞர்கள், காவலர்கள் மற்றும் வழக்கு தொடர்பாக வருபவர்களுக்கு தேவையான வசதிகளும் இல்லாமல் இருப்பது பெரும் குறையாகவே இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் செயல்பட்டு வந்த இந்த நீதிமன்றத்தின் வழக்கு எல்லையானது விருதுநகர் மாவட்டம் வரையிலும் பரவி கிடந்தது. ஆனால் இதுபோன்ற நிலை இப்போது இல்லை. தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. தினமும் நீதிமன்றத்திற்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான கட்டிடங்கள், நீதிபதிகளுக்கான அறைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படைவசதிகளையும் செய்துதரவேண்டும், இதற்கான புதிய நீதிமன்ற கட்டிடத்தை தாமதமின்றி கட்டிடவேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை மூலமாக புதிய நீதிமன்ற வளாக கட்டிடம் ரூ.5.60கோடியில் கட்டுவதற்கு திட்டமதிப்பீடு செய்யப்பட்டது. ஆனாலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பெருமாள் பிரபு, செயலாளர் சங்கரலிங்கம், சங்க உறுப்பினர்களான மாவட்ட தொலைதொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் திருப்பாற்கடல், முத்துராமலிங்கம், சீனிவாசன் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., சண்முகநாதன் தலைமையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து புதிய நீதிமன்ற வளாகத்தை தாமதமின்றி கட்டித்தந்திடவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு உடனடியாக உரிய தீர்வு காணப்படும் என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.