தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட நீதிமன்றம் தடைவித்ததது.
இதைத்தொடர்ந்து மெரினாவில் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் நடைபெற்ற இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டங்களை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வருடமும் அவனியாபுரத்தில் வருகிற 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும், உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளான அலங்காநல்லூரில் 16ம் தேதியும் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைபோல் ஸ்ரீவைகுண்டத்தில் மாநில அளவிலான ஜல்லிக்கட்டு போட்டி 25ம் தேதி நடத்த அனுமதிக்க வேண்டும் என ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கோரிக்கை மீதான பதிலை அளிக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் காலம் தாழ்த்தி வருவதாக கூறி ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் வருகின்ற 10ம் தேதி காவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியம் மற்றும் காவல் ஆய்வாருக்கு ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
ஸ்ரீவைகுண்டத்தில் மாநில அளவிலான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறையினருக்கு கோரிக்கை மனு வைத்தோம்.
ஆனால் இதுவரை எங்களது கோரிக்கை மனுவிற்கு எவ்வித பதிலையும் அளிக்காததை கண்டித்தும், ஜல்லிக்கட்டு போட்டி ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற 10ம் தேதி முதல் ஸ்ரீவைகுண்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்திட அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.