
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக நீடித்து வந்த பதற்றநிலை, தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. 144 தடையுத்தரவு திரும்பப்பெறப்பட்டது. துண்டிக்கப்பட்ட இணையதள சேவையும் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். துணை முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்று பாதிக்கப்பட்டவர்கள் 47 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு நிவாரண தொகை காசோலையையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும்” என உறுதிபட தெரிவித்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். நாளை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி, அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்ற அந்நகர் மக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நேரில் அளித்த கோரிக்கையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே தற்பொழுது இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.