தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இராமானுஜம்புதூரில், கிள்ளிக்குளம் தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். மேலும் மரங்களை சிறப்பாக வளர்த்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட்டில் அமிலங்களை அகற்றும் பணி தொடர்ந்து 10 நாட்களாக நடந்து வருகிறது. ஸ்டெர்லைட்டில் இருந்து சல்பீயூரிக் ஆசிட் 3200 டன், பாஸ்பீயூரிக் 410 மெட்ரிக் டன், ஜிப்சம் 9 ஆயிரம் மெட்ரிக் டன், ரா பாஸ்பேட் 740 மெட்ரிக் டன், சிலிசிக் ஆசிட் 21 மெட்ரிக் டன் என தற்போது வரை வெளியேற்றப்பட்டு வருகிறது-. மேலும் இந்த பணிகள் அனைத்தும் 30 நாட்களுக்குள் நிறைவடையும். ஸ்டெர்லைட்டில் இருந்து அமிலங்களை வெளியேற்றுவதற்காக மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக நகரும் மின் இணைப்பு மூலமாகவே அமிலங்களை வெளியேற்றுவதற்காக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருதூர் அணைக்கட்டில் சிக்கிய மாடுகள் அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட சார் ஆட்சியர் கண்காணித்து வருகிறார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி 60 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்தோடுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணியை தூய்மை செய்யும் பணி நடந்ததை போல் தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தனியார் கம்பெனிகளின் பங்களிப்புடன் விரைவில் தாமிரபரணி தூய்மை செய்யப்படும். என்றார்.