தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே எள்ளுவிளை கீழத் தெருவைச் சேர்ந்தவர் மன்னர்ராஜா (53). இவர் ஹைதராபாத்தில் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உஷா ராணி (49). தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வெளியூரில் படித்து வருகிறார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு உஷா ராணி, திருப்பூரில் வசித்து வரும் அவரது சகோதரரை பார்க்க சென்றாராம். இதனால் வீட்டில் இருந்த 2ஆவது மகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கினாராம்.
இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் அருகே பிச்சிவிளையைச் சேர்ந்த வரதராஜன் மகன் கட்டடத் தொழிலாளி சங்கர் (32) இந்த திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. சங்கர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த வீட்டில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டாராம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்ட அவர் நகை திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சங்கரை போலீசார் நேற்று கைது செய்து, அவரிடமிருந்த நகையை பறிமுதல் செய்தனர்.