தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஏரல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அனிதா, சுந்தரராஜன் மற்றும் போலீசார் ஏரல் ஆற்றுப்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.விசாரணையில் அவர், குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தானைச் சேர்ந்த 17 வயது வாலிபர் என்பதும், இவர் பல்வேறு வீடுகளில் புகுந்து நகைகள், பணத்தை திருடியதும் தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.
அந்த வாலிபர் கடந்த 22-1-2018 அன்று குரும்பூர் அருகே சுகந்தலையில் லிங்கஜோதியின் (36) வீட்டில் புகுந்து, பீரோவை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை திருடியதும், பின்னர் கடந்த 28-1-2018 அன்று ஏரல் அருகே மொட்டதாதன்விளையில் விவசாயி முத்துராஜாவின் (52) வீட்டில் புகுந்து, பீரோவை உடைத்து ரூ.11 ஆயிரம் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடியதும் தெரிய வந்தது. மேலும் அவர், கடந்த 29-1-2018 அன்று குரும்பூர் அருகே காரவிளையில் செல்வியின் (45) வீட்டில் புகுந்து, பீரோவை திறந்து 7 பவுன் தங்க நகைகளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 14 பவுன் தங்க நகைகள், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.11 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரை தூத்துக்குடி இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.