கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவர்கள் தங்களிடம் நெல் உற்பத்திக்காக கொடுக்கப்பட்ட இடத்தில் விதைப்பது முதல் அறுவடை வரை நெல் உற்பத்தியில் ஈடுபட்டனர்.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை வேளாண்மை மற்றும் முதுநிலை வேளாண்மை கற்பிக்கப்படுகிறது. இதில் பயிலும் இளங்கலை மாணவர்களுக்கு வேளாண்மை படிப்பின் ஒரு பகுதியாக பயிர் உற்பத்தி பாடப் பிரிவில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் நெற்பயிர் உற்பத்தி செய்வதற்காக 5 சென்ட் நிலம் கொடுக்கப்படுகிறது.
இதில், மண் வளத்தை சரிசெய்வதில் இருந்து தண்ணீர் பாய்த்தல், விதைப்பது, உரமிடுவது, களை எடுப்பது முதல் அறுவடை செய்வது வரை மாணவர்களே செய்ய வேண்டும். இதில், வரும் வருமானம் மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு இளங்கலை வேளாண்மை மாணவர்கள் 6 ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தனர். அப்பயிர்கள் தற்போது முதிர்ச்சி பெற்று அறுவடைக்கு தயாரானதும் மாணவர்கள் தாங்கள் பயிரிட்ட நெற்பயிர்களை அறுவடை செய்தனர்.
இதை கல்லூரியின் முதல்வர் ராமலிலிங்கம், பேராசிரியர் மற்றும் பண்ணை மேலாண்மை துறைத் தலைவர் வேலாயுதம் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்களும், பண்ணை மேலாளர்களும் கலந்துகொண்டனர்.