தூத்துக்குடி மாவட்டத்தில் பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு மருதூர், மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகள் மூலம் பாசனத்திற்கு மற்றும் குடிநீருக்கு வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த பாசன நிலப்பரப்பு 46684 ஏக்கராகும். இதில் சுமார் 27000 ஏக்கரில் வாழைகள் பயிரிடப்படுகின்றன. இந்த வாழைகள் போதிய தண்ணீர் இல்லாமல் கருக துவங்கிவிட்டன.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வடகால் மூலம் 9 ஆயிரத்து 800 ஏக்கர் பாசன பரப்பும், தென்கால் மூலம் 12 ஆயிரத்து 760 ஏக்கர் பாசன வசதியும் பெறுகிறது. இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் அனைத்து பகுதிகளிலும் சுமார் 10 லட்சம் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. அந்த வாழைகள் அனைத்தும் தற்போது கருவத்தொடங்கி விட்டது. விவசாயிகள் பாபநாசம் அணைக்கட்டில் இருந்து வாழைப்பயிர்களை பாதுகாக்க தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்திருந்தனர். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
இந்நிலையில் இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பஜாரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் பாலாஜி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது,
எங்கள் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் பயிரிட்டுள்ளோம். இதனை நம்பி 40 ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. கடந்த 2 வருட காலமாக பருவ மழை இல்லாத காரணத்தால் இந்த பகுதியில் வாழைகள் பயிரிட்டிருந்தோம். தற்போது வாழைகள் அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கேரளா பகுதியில் மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அனைத்து அணைக்கட்டுகளும் வேகமாக நிரம்பி வருகிறது. ஆனால் தமிழக அரசு தண்ணீர் திறந்து விடப்படும் என்று மட்டுமே அறிவித்துள்ளது. ஆனால் இன்று வரை தண்ணீர் திறக்கவில்லை. நெல்லை மாவட்டத்திற்கு மட்டுமே பாபநாசம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு தண்ணீர் வழங்க மறுக்கிறது. கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுப்பது போல் தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. தண்ணீர் வழங்க மறுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். அதற்காக எத்தனை துப்பாக்கிச் சூட்டையும் பார்க்க தயாராக உள்ளோம். என அவர்கள் தெரிவித்தனர்.
===


