வல்லநாடு அருகே பெண் தொழிலாளி கொலையில் அவருடன் போனில் பேசிய மர்ம நபர் யார் என்று போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓட்டல் ஊழியர் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள விளாத்திகுளத்தைச் சேர்ந்த தோட்ட காவலாளி சுப்பிரமணியன் (55) என்பவர் மனைவி மூக்கம்மாள் என்ற மூக்காச்சி (42) இவர் பாளை முருகன்குறிச்சியில் ஒரு ஓட்டலில் சமையல் பாத்திரங்கள் கழுவி கொடுக்கும் தொழில் செய்து வந்தார். தினமும் மாலையில் வேலைக்கு செல்லும் அவர் மறுநாள் காலை வீடு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி மாலை வேலைக்கு சென்றவர் மறுநாள் வீடு திரும்பாததால் அவரது கணவர் ஓட்டலுக்கு போன் செய்து கேட்கவே அவர்கள் வேலைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து உறவினர் வீடுகளில் தேடியும் மூக்கம்மாள் பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் 24ம் தேதி சுப்பிரமணியன் முறப்பநாடு போலீசில் புகார் செய்தனர். அதன் பின் போலிசார் மூக்கம்மாள் படம் போட்டு பிட் நோட்டீஸ் அடித்து அப்பகுதியில் விநியோகித்தனர்.
மூக்கம்மாளை தொடர்ந்து தேடி வந்த நிலையில்தான் 25ம் தேதி நள்ளிரவு அவர் சேதுராமலிங்கபுரம் காட்டு பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. அழுகிய நிலையில் உடல் காணப்பட்டதோடு அவர் உடுத்தியிருந்த சேலை அலங்கோலமாக கிடந்தது. மேலும் உடல் அருகில் 3 மது பாட்டில்களும் கிடந்தன. அதோடு கார் வந்துபோன தடமும் இருந்தது.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று மூக்கம்மாள் வேலை பார்த்த ஓட்டல் ஊழியர் மற்றும் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அந்த ஓட்டல் ஊழியர் மூக்கம்மாளை அடிக்கடி பைக்கில் ஏற்றி ஊரில் விட்டுச் சென்றுள்ளார். இதுபோல் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் பைக்கிலும் அடிக்கடி மூக்கம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார்.
பொதுவாக கிராம பகுதியில் ஆண், பெண், சிறியாவர்கள் பாகுபாடின்றி அந்த வழியாக யார் வாகனம் வந்தாலும் அதில் தொற்றி செல்வது வழக்கம். அதுபோல்தான் மூக்கம்மாள் வல்லநாடு நபருடன் வந்தாரா அல்லது வேறு பின்னணி எதுவும் உண்டா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடந்த 2 வாரத்துக்கு முன்பு வல்லநாடு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் மர்ம நபர் இவரை விரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூக்கம்மாள் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் குடும்பத்திற்கும் சொத்து பிரச்சனை உள்ளதாக தெரிகிறது. அதன் காரணமான இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஆனால் மூக்கம்மாள் ஆடை அலங்கோலமாகவும், அங்கு 3 மதுபாட்டில்கள் கிடந்துள்ளதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தற்போது அவர் யார் யாருடன் போனில் பேசினார். கொலை செய்யப்பட்ட போது அவரிடம் பேசிய மர்ம நபர் யார் என்று போலிசார் விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து போலிஸ் தரப்பில் கூறும் போது இன்று அல்லது நாளை கொலைக்கான முழு காரணம் தெரிந்துவிடும் என்று தெரிவித்தனர்.


