
நெல்லை – தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க 2004ம் ஆண்டு திட்டம் தீட்டப்படடது. இதற்காக 232 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கிடையில் பாதி பணி கூட நிறைவு பெறாத நிலையில் ஒப்பந்தக்காரர் தனக்கு பேசப்பட்ட தொகை கட்டுப்படியாகாததால் கடந்த 2007ல் ஆண்டு பணியை விட்டுச் சென்று விட்டார்.
இதனால் வழி நெடுக பாலங்கள் மற்றும் சாலைகள் அறைகுறையாக போடப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அவ்வப்போது விபத்துக்களும் நடக்கத் தொடங்கின.
பாதியில் பணி நிறுத்தப்பட்டது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற காரணத்தினால் பணியை தொடர முடியாத நிலை நீடித்தது. கடந்த 2010ஆம் ஆண்டு விடுப்பட்ட பணிகளுக்கு கூடுதல் திட்டம் தயாரிக்கப்பட்டு மீண்டும் கூடுதல் நிதி ஒதுக்கினர்.
இதையடுத்து சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக தொடங்கின. மொத்தம் 320 கோடியிலான புதிய திட்ட மதிப்பில் நடைபெற்று வந்த சாலைப்பணி விரைவாக நடந்தது. முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றைக் கடக்கும் 4 வழி மேம்பாலம் மற்றும் புதுக்கோட்டையில் இருவழிப்பாலம் ஆகிய மெகா பாலங்கள் அமைக்கப்பட்டன. இவை தவிர 10 சிறிய பாலங்களும் 66 சிறிய கல்வெட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சாலை பணிமுடிந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது.
இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலை திட்டப்பணி அமல் படுத்தப்பட்டு வந்தாலும் கூட நெல்லை&தூத்துக்குடி இடையே நான்குவழிச்சாலை பணி மட்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடியாமல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் பயணிகள் ஆனந்தமாக போக்குவரத்தினை கொண்டாடினர்.
நெல்லை&தூத்துக்குடி இடையே உள்ள இந்த சாலை மூலமாக இரு மாநகரங்களையும் காரில் சென்றால் 45 நிமிடங்களில் கடக்க முடிந்தது. மேலும் துறைமுக போக்குவரத்து விரைவாக நடைபெற்றது.
இந்த பணி 5 வருடம் கூட நீடிக்கவில்லை. கடந்த நவம்பர் 16ந் தேதி இரவு தாமிரபரணி பாலத்தில் தீடீர் ஓட்டை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர் வாகன ஓட்டிகள். போக்குவரத்து மாற்றப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து தினகரன் செய்தி வெளியிட்டு வந்தது. இதன் பயணாக இந்த ஓட்டை அமைக்கும் பணியுடன் நெல்லை & தூத்துக்குடி செல்லும் இருவழிசாலை முழுவதும் தரமாக சீரமைக்கப்பட்டது. இந்த பணி சரியாக 6 மாத காலம் நீடித்தது. தற்போது தூத்துக்குடி & நெல்லை செல்லும் சாலையில் உள்ள பாலத்தினை சீரமைக்கும் பணி துவங்கியது. கடந்த 2 ந்தேதி மதியம் 12 மணியளவில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின் பாலத்தினை சீரமைக்கும் பணி துவங்கியது. அந்த பணியின் படி மேலே போடப்பட்ட தார்கள் அனைத்து ம் அகற்றபட்டபோது, உள்ளே பாலத்தின் அடித்தளம் தெரிந்தது. அந்த அடித்தளத்தில் பல இடங்களில் மெகா ஓட்டை இருந்தது. இதனால் வேலை செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு மட்டுல்லாமல் உள்ளே கான்கிரிட் மேலே ஷீட் விரிக்கப்பட்டு இருக்கவேண்டும். அதை விரிக்காமலேயே விட்டு விட்டது தெரியவந்தது. ஓட்டைகளை கல் வைத்து மறைத்து வைத்திருக்கிறார்கள். அதை திறந்து அடியில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பாலத்தின் அடிபகுதியில் பல ஓட்டைகள் வழியாக சூரிய ஒளி தெரிந்தது. இதனால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பசுமை தமிழ்தலைமுறை சுதன் கிறிஸ்டோபர் கூறும்போது,
நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நாலுவழிசாலை மக்களுக்கு மிக உதவியாக உள்ளது. இந்த பாதை துவங்கப்பட்டு 5 வது வருடத்திலேயே பாலத்தில் ஓட்டை விழுந்து விட்டது. அதன் பின் டெல்லியில் இருந்து ஆய்வு அதிகாரிகள் வந்து பாலத்தினை முழுவதுமாக சீரமைக்க உத்தரவிட்டனர். அதன் பயனாக ஒரு பகுதி சாலை சீரமைக்க பட்டு விட்டது. மறுபக்கம் சீரமைக்கும் பணி துவங்கி விட்டது. நாங்கள் மிகவும் சந்தோஷமடைந்தோம். இந்த பணியை மிக சிக்கிரமாக முடித்து வைக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இரண்டு பாலத்துக்கும் நடுவில் உள்ள பள்ளத்தினை அடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். ஆனால் பழுது பார்க்கும் போது தான் பழைய ஒப்பந்தகாரர்கள் ஷீட் போடாமலேயே பாலத்து பணியை முடித்ததும், தரமற்ற முறையில் கான்கிரிட் அமைத்ததும் தெரியவந்தது. தற்போது பணி துவங்கியவர்கள் அப்படியே போட்டு விட்டு போய் விட்டனர். இதனால் மேலும் பணி தாமதமாகி விடுமோ என பொதுமக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. எனவே தரமாக பாலத்தின் வேலையை காலம் தாழ்த்தாமல் செய்து தரவேண்டும் என அவர் கூறினார்.
இந்த பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.