வல்லநாடு அருகே உள்ள அகரம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துமாடன். இவரது மகன் அழகு நம்பி (40). தூத்துக்குடி யில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தங்கம்மாள் என்ற சாந்தி(35) என்ற மனைவியும் உஷா(13) என்ற மகளும் முத்துகுமார் (10) என்ற மகனும் உள்ளனர். வருகிற 2 ந்தேதி உஷாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக ஜவுளி எடுத்துக்கொண்டு கணவன் மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீடு திரும்பினர். அதன் பின் 10 மணி அளவில் அழகு நம்பி வல்லநாடு டாஸ்மாக் செல்ல தனது மோட்டார் பைக்கை எடுத்துள்ளர். அதை தங்கம்மாள் தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அழகுநம்பி தங்கம்மாள் வயிற்றில் உதைத்தாக தெரிகிறது. இதில் மயங்கி சரிந்தார் தங்கம்மாள். அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் இறந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலில் தங்கம்மாள் என்ற சாந்தி கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்து விட்டாதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது தங்கம்மாள் வயிறு பெரிதாக வீங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கணவர் அழகு நம்பியை தனியாக விசாரித்த போது அவர் கோபத்தில் மிதித்து விட்டதாகவும், இயற்கனவே குடல் இறக்கம் ஆபரேசன் நடந்த காரணத்தினால் அந்த இடத்தில் காயம் பட்டு இறந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிசார், தங்கம்மாள் என்ற சாந்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கணவர் அழகு நம்பியை கைது செய்தனர்.
மகள் சடங்குக்கு ஜவுளி எடுத்து வந்த நாளே கணவர் அடித்து மனைவி இறந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.