வல்லநாடு அருகே நடந்த கோர விபத்தில் ஒருவர் பலி. பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதியதால் விபத்து.
வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்று பாலத்துக்கு கீழ்புறம் நேற்று மாலை 4 மணியளிவில் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலியை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் புகுந்தது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரை ஓட்டிவந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். அருகில் இருந்தவர் நினைவிழந்த நிலையில் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து காரை ஓட்டியவரை பற்றி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சாத்தான்குளம் அருகில் உள்ள நரையன்குடியிருப்பை சேர்ந்த ஐகோர்டுதுரை மகன் சவுந்தர்பழம்(35) என கண்டுபிடித்தனர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. தேங்காய் வியாபாரம் பார்த்து வந்ததாகவும். தற்போது பொங்கல் வியாபாரத்துக்கு கரும்பு வாங்க தூத்துக்குடி சென்றதாகவும், அங்கு நண்பர் ஒருவரை பார்த்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு ஊருக்கு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளது என கூறப்படுகிறது.
அருகில் இருந்தவர் நவீன்(19) என்றும் இவரது குடும்பம் கோயம்புத்தூரில் வசித்து வருவதாகவும், நவீன் தனது பாட்டி வீட்டில் இருந்து கொண்டு கொம்மடிக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து முறப்பநாடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.