வசவப்பபுரத்தில்
பாறைக்கிண்ணங்கள்
ஆவலோடு சென்று பார்க்கும் தொல்லியல் ஆர்வலர்கள்.
ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமா? தொல்லியல் துறை
தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் உள்ள செய்துங்கநல்லூருக்கும் திருநெல்வேலி -தூத்துக்குடி சாலையில் உள்ள முறப்பநாடுக்கும் இடையே உள்ள சிறு கிராமம் வசவப்பபுரம். இங்குப் பரம்பு ஒன்று உள்ளது. இங்குத் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகே பாறைகளும் சரல்களும் நிறைந்த பகுதி உள்ளது. இந்த இடத்தை பறம்பு என்று அழைக்கின்றனர். இந்த பறம்பு பகுதி விவசாயத்திற்கு உகந்து இல்லை. மற்றும் தென்னை பனை போன்ற மரங்களை வளர்த்து தோட்டங்களை உருவாக்கவும் முடியாத இடம். வீடு கட்டி மக்கள் வாழும் ஊராகவும் மாற்ற முடியாத இடம். மேலும் ஆடு மாடு மேய்ச்சலுக்குக்கூட இந்த இடத்தை பயன்படுத்த முடியாது.
இந்த இடத்தில் நிறைய முதுமக்கள் தாழிகள் உள்ளது.
அங்கு திருநங்கைகள் வீடு கட்டி முடிக்கவும், தூத்துக்குடி நாலு வழிச்சாலை அமைக்கவும் சரல் மண்ணைத்தோண்டி உள்ளனர். அப்போது நிறைய முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவைகளைப் பறம்பிலும் முதுமக்கள் தாழிகள் நிறைந்து காணப்படுவது போலவே இங்கும் முதுமக்கள் தாழிகள் காணப்படுகிறது. எதற்கும் பயன் படாத இடத்தை நம் முன்னோர்கள் இடுகாடாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். நிலங்களின் தன்மையறிந்து அதனைப் பயன்படுத்துவதில் நம் முன்னோர்கள் மிக்க திறமைசாலிகள் என ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் வசவப்பபுரம் பறம்புகள் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த இடத்தில் சிங்கம் பாறை என்னும் இடத்தில் பாறைக் கிண்ணங்கள் காணப்படுகின்றன. இந்தப்பாறை கிண்ணங்கள் மிகவும் பழமையானது. பழைய கற்கால மனிதர்கள் உருவாக்கிய பாறைக் கிண்ணங்கள் என்று அழைக்கப்படும் கற்குழிகள் காணப்பட்டன. இதை ஆர்வத்துடன் தொல்லியல் ஆர்வலர்கள் பார்வையிட்டனர். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் சுதாகர், தூத்துக்குடி கூட்டுறவு துணை பதிவாளர் சுப்பு ராஜ், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் ஜோசப் ராஜ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, ஆய்வு மாணவர் அபிஷ்விக்னேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். இவர்களை உள்ளூர் வாலிபர்கள் வழி நடத்தினர். இவர்கள் வசவப்பபுரம் காலனி மற்றும் பறம்பு மேல் உள் பகுதிகளின் பார்வையிட்டனர்.
இது குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிரியல் துறைப்பேராசிரியர் டாக்டர் சுதாகர் கூறும் போது,
சாலைகள் அமைக்கவும் வீடு கட்டவும் இந்த பகுதியிலிருந்து கல் மற்றும் சரல் பெருமளவில் எடுக்கப் படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் அழிக்கப்பட்டு வருகின்றது. ஒரு முறை அவ்வாறு கல் மற்றும் சரல் எடுக்கும் போது ஒரு தாழி உடைந்துள்ளது. அதனுள் ஒரு வாள் இருந்துள்ளது. அதனை வருவாய்த் துறையினர் கையகப்படுத்தியதாக அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தாழிகள் சிவகளையில் உள்ள தாழிகளை ஒத்துள்ளதாகக் கணிக்கிறேன்.
மேலும் ஆங்காங்கே பெரிய பாறைகளும் இந்த பறம்பில் உள்ளது. இந்த பறையில் நல்ல வழுவழுப்பான இளஞ்சிவப்பு நிறத்தில் சிறு சிறு குழிகள் நிறையை இருக்கிறது. இந்த குழிகள் கல்லையோ அல்லது ஒரு இரும்பு குழவியையோ வைத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஏன் இத்தகைய குழிகளை இந்த பாறைகளில் உருவாக்கியிருக்கிறனர் எனச் சிந்தித்தால் ஏதோ நாட்டு மருந்து தயாரிக்க சில பொருட்களைப் பாறையில் வைத்து அரைத்து இருக்க வேண்டும் எனக் கணிக்கத் தோன்றுகிறது.
எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்த குழிகள் உருவாக்கப்பட்டிருக்கும்?
இதற்கும் சரியான பதில் இல்லை. ஆனால் கண்டறிவது கடினமில்லை. கண்டறிவது அவசியம். இந்த குழிகள் பல ஆயிரம் ஆண்டுகள் முன் உருவாக்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.
இந்த குழிகளில் அரைத்தது என்ன மருந்து?.அது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. சுற்று வட்டார மக்களைச் சந்தித்துப் பேசினால் எதாவது தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது. அங்குள்ள சமுகத்தில் சிலர் இந்த மருந்தை இப்போதும் தயாரிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்க வாய்ப்புள்ளது.
ஒரே பாறையில் ஆறு குழிகளைப் பார்த்தோம். ஆனால் இது மாதிரி நிறைய இத்தகைய பாறையில் இந்த குழிகளைக் காணமுடிகிறது. இதனை வைத்து நான் கணிப்பது என்னவென்றால் ஒரு காலத்தில் இங்குத் தயாரிக்கப்பட்ட மருந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் எனக் கருதுகிறேன்.
இந்த குழிகள் ஒவ்வொன்றும் உள்ளங்கை அளவில் இருக்கிறது. மேலும் இவை சுமார் ஐந்து சென்டிமீட்டர் ஆழம் கொண்டது. இவை நேர்த்தியாகப் பார்க்க அழகாக உள்ளது.
இந்த இடம் அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு மட்டுமல்ல வரலாறு, தமிழ், மற்றும் வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் சிந்தனைக்கு நல்ல தீனி. எனவே தமிழக அரசு வசவப்பபுரத்தில் விரைவாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றுஅவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 100 வருடங்களுக்கு முன்பே ஆதிச்சநல்லூரை ஆய்வுசெய்த அலெக்ஸாண்டர் இரியா தாமிரபரணி கரையில் 37 இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என எழுதி வைத்திருந்தார். அதில் வசவப்பபுரம் பரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தாமிரபரணி கரையில் தற்போது மாநில அரசு அகழாய்வு களங்களைத் தேடும் பணியைத் துவங்கியுள்ளனர். எனவே அவர்கள் வசவப்பபுரம் பறம்பை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகழாய்வு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


