சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடு செய்ததாக 29 விற்பனையாளர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள 29 ரேஷன் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, அத்தியாவசியப் பொருள்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை பற்றாக்குறையாக இருப்பது தெரிய வந்தது. மேலும், சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருள்களான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய பொருள்களிலும் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர, போலி ரசீது மூலம் 28 கிலோ அரிசி, 66.5 கிலோ சர்க்கரை, 21 கிலோ கோதுமை, 17 லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, முறைகேடுகள் செய்த 29 விற்பனையாளர்களிடமிருந்து ரூ. 8,017 அபராதத் தொகையாக வசூலிக்க உத்தரவிடப்பட்டது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


