கால்வாய் கிராமத்திற்கு முறையாக அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை பொதுமக்கள் புதன்கிழமை இரவு திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு எற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் மக்கள் தங்கள் வாழ்வாதார தேவைகளுக்காக பொருள்களை வாங்குவதற்கும், மாணவ மாணவிகளின் கல்வி தேவைகளுக்காகவும் ஸ்ரீவைகுண்டம் அல்லது திருநெல்வேலிலி வந்து செல்கின்றனர். ஆனால், இவர்களின் போக்குவரத்திற்கு என குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தும் முறையாக இயக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கால்வாய் கிராமத்திற்கு வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்து பணிமனையின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக புகார் தெரிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையை அப்பகுதி மக்கள் புதன்கிழமை இரவில் முற்றுகையிட்டனர்.
இத்தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் அங்கு சென்று மக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, கால்வாய் கிராமத்திற்கு அரசுப் பேருந்து முறையாக இயக்கப்படும் என பணிமனை பணியாளர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.