முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புஷ்கர திருவிழாவை முன்னிட்டு புதிய படித்துறை கட்டும் இடத்தினை தாமிரபரணி ஈஸ்வரம் டிரஸ்ட் சார்பில் தேர்வு செய்தனர்.
தாமிரபரணி ஆற்றில் அக்டோபர் 12 ந்தேதி முதல் 12 நாள்கள் மகா புஷ்கர திருவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்காக தாமிரபரணி டிரஸ்ட் சார்பில் முறப்பநாடு நங்கை முத்து அம்மன் கோயில் அருகே உள்ள தாமிரபரணி கரையில் படிகட்டும் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக குழுவினர் படித்துறை அமையும் இடத்தினை பார்வையிட்டனர். அதன் பின் படித்துறை கட்டுவது, புஷ்கர திருவிழாவின் போது சிறப்புயாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் ஆற்றங்கரையில் நடந்தது.
பெருங்குளம் செங்கோல் மடம் ஆதினம் தலைமை வகித்தார். பிள்ளையார் பட்டி பிச்சை குருக்கள் சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து செங்கோல் மட ஆதினம் கூறும்போது, ‘முறப்பநாடு கிராமம் தெட்சன காசி என்றழைக்கப்படுகிறது. தாமிரபரணி ஈஸ்வரம் டிரஸ்ட சார்பில் இங்கு படித்துறை அமைக்கப்படவுள்ளது. இந்த இடத்தில் 12 நாள்களும் பிள்ளையார்பட்டி குருக்கள் பிச்சை குருக்கள் சார்பில் இந்த உலகம் உய்விக்க வேண்டி பல்வேறு யாகங்கள் நடைபெறவுள்ளது. இதில் உள்ளுர் மக்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வந்து கூடுகிறார்கள். இதற்கான அனைத்து வசதிகளை செய்து தர வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்’ என்று அவர் கூறினார். அந்த கூட்டத்தில் தாமிரபரணி ஈஸ்வரம் டிரஸ்ட் தலைவர் முத்து குமார், விவேகம் ரமேஷ், பொருளாளர் இளங்குமரன், பலரசம் விநாயகர் மூர்த்தி, சங்கர சுப்பிரமணியன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.