முறப்பநாடு படுகையூரில் இடிந்து கிடக்கும் தடுப்பு சுவரால் பொதுமக்கள் வீட்டுக்கு செல்ல வசதி இன்றி அவதியுற்று வருகின்றனர்.
கருங்குளம் ஒன்றியம் முறப்பநாடு கோவில்பத்து பஞ்சாயத்தினை சேர்ந்த ஊர் படுகையூர். இந்த ஊர் மருதூர் மேலக்கால் பாசனத்தில் இருந்து பிரியும் முக்கவர்கால்வாய் கரையில் உள்ளது.
இதன் ஒரு புறம் குட்டைக்கால் குளமும், மற்ற் மூன்று கரைகளிலும் முக்கவர் கால்வாய்ஓடி வருகிறது. எனவே தீவுபோல உள்ள இந்த கிராமத்தினை சுற்றி எப்போதுமே தண்ணீர் சென்று கொண்டிருக்கும். எனவே இரண்டு பாலம் கட்டியும் குடியிருப்புகள் இடிந்து விழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் தடுப்பு சுவர் சுமார் 100 மீட்டருக்கு கட்டப்பட்டது. இந்த சுவர் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் இவ்வூருக்கு செல்லும் சாலையும் இடிந்தது. எனவே தெருவுக்குள் நான்கு சக்கரவாகனங்கள் செல்ல முடியவில்லை.
இருசக்கர வாகனங்கள் சென்றாலும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான். பல வேளைகளில் இவ்வூருக்கு செல்லும் இருசக்கரவாகனங்கள் வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகிறது.
இதுகுறித்து இந்த ஊரைச்சேர்ந்த முத்துராமலிங்கம் கூறும் போது கடந்த 10 வருடங்களாக இங்குள்ள தடுப்பு சுவர் இடிந்துகிடக்கிறது. இதுகுறித்துமாவட்ட ஆட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலரிடம் மனு கொடுத்தோம். நேரில் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் பார்வையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்த இடத்தில் ஊருக்குள் செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்ககிறது. மேலும் நான்கு சக்கர வாகனங்கள் ஊருக்கு வரவே முடியவில்லை. எனவே திருமண நாள்களில் மண தம்பதிகள் நடந்தே வீட்டுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. னுங்கள் கிராம மக்கள் குளிக்கும் படித்துறையும் இங்குள்ளது. இடிந்து கிடக்கும் இடிபாடுகளுக்குள் பாம்பு போன்ற விஷசந்துகள் இங்கு குளிக்கும் மக்களை தீண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இடிந்து கிடக்கும் தடுப்பு சுவரை சீர் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த கிராமத்தில் மக்கள் தடுப்பு சுவர் இடிந்த காரணத்தினால் சாலை சரிந்து உள்ளே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் கட்டிதரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


