முறப்பநாடு அருகே முக்கவர் கால்வாயை தூர்வாரும் பணியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டில் இருந்து மருதூர் மேலக்காலில் இருந்து பிரியும் முதல் குளமான முத்தாலங்குறிச்சி குளத்துக்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் முக்கவர் சானல் செல்கிறது. இந்த சானலும் தூர்ந்து போய் கிடந்தது. எனவே முக்கவர் சானலை கான்கிரிட் அமைக்கவும், மேலும் மருதூர் மேலக்கால் மூலம் பாசம் பெறும் 16 குளங்களில் உள்ள மடைகளை சீரமைக்கவும் உலக வங்கி திட்டம் 10 கோடியே 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை திட்டங்கள் வட்டத்தின் சிறப்பு திட்டம் நான்குனேரி கோட்டம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான முதல் கட்ட பணியை பொதுப்பணிதுறையினர் துவங்கியுள்ளனர். சுமார் 2 கோடி ரூபாய் செலவில் முக்கவரில் இருபுறமும் கான்கிரிட் சுவர் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக வல்லநாடு அருகே உள்ள பக்கபட்டி முக்கவர் சானலில் பொக்கலின் இயந்திரம் மூலம் தூர் வாரப்பட்டு வருகிறது. இந்த பணியில் மிகவும் குறுகலாக உள்ளது. இதுபோன்று கால்வாய் அமைத்தால் முத்தாலங்குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வராது என விவசாய சங்க தலைவர் முருகன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பணியினை முற்றுகையிட்டனர். முற்றுகை போராட்டத்தில் முத்தாலங்குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜமணி, கந்தசாமி, முன்னாள் துணை தலைவர் நடராஜன், முன்னாள் கிராம உதவியாளர் நல்லதம்பி, ஆழிகுடி துரைபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் நான்குநேரி சிறப்பு திட்ட கோட்ட செயற்பொறியாளர் ஞானசேகர், உதவிய செயற்பொறியாளர் வேலையா, உதவி பொறியாளர் நந்தினி, முறப்பநாடு சப்இன்ஸ்பெக்டர் அஜீஸ்மல்ஜெனிப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் மக்கள் கோரிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்று கொண்டனர். அதன் பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.