மருதூர் மேலக்காலில் உடைந்து கிடக்கும் மடையினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பசுமை தமிழ்தலைமுறை புகார் கூறியுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் 7 வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. இந்த அணையில் இருந்து – மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் பாசன வசதி ª பற்று வருகிறது. மருதூர் மேலக்காலில் முத்தாலங்குறிச்சி குளம், குட்டைக்கால் குளம், கொள்ளீர்குளம், நாட்டார்குளம், செய்துங்கநல்லூர் குளம், தூதுகுழி குளம், கருங்குளம் பெட்டைக்குளம், கிருஷ்ணன் குளம் , வீரளபேரிகுளம், கால்வாய் குளம், வெள்ளூர்குளம், தென்கரைகுளம், நொச்சிகுளம், முதலமொழி குளம், வெள்ளரிக்காய் ஊரணி குளம், தேமான் குளம், புதுக்குளம் உள்பட பல குளங்கள் பயன்பெறுகிறது .
சாத்தான்குளம் பகுதியில் உள்ள சடையனேரி கால்வாயுக்கும் இந்த கால்வாய் வழியாகத்தான் தண்ணீர் செல்கிறது.
மருதூர் கீழக்கால் வழியாக செந்திலாம்பண்ணை குளம், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளம், பேரூர் குளம், சிவகளை குளம், பெருங்குளம் உள்பட பல குளங்கள் பயன்பெறுகிறது. இந்த இரண்டு கால்வாய் வழியாக சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த கால்வாய் வழியாக பிசானம், கார், முன்கார் ஆகிய மூன்று சாகுபடி நடந்தது. மூன்று போகம் விளைந்த பூமி தற்போது சரியான நீர்மேலாண்மை இல்லாத காரணத்தால் ஒரு போகம் விளைவதே கேள்வி குறியாகி விட்டது. இதனால் விளைநிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாக மாறி வருகிறது.
மருதூர் மேலக்கால் பகுதியில் சென்ற ஆண்டு பொதுப்பணித்துறையால் பல லட்ச ரூபாய் செலவில் மதகுகள் புதிதாக கட்டப்பட்டன. ஆனால் அதில் ஷட்டர் கூட போடாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து பசுமை தமிழ் தலைமுறை நிறுவனர் சுகன் கிறிஸ்டோபர் கூறும் போது, மருதூர் அணையில் இருந்து பிரியும் மருதூர் மேலக்கால், கீழக்கால் வழியாக சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாய் களில் பல நேரம் அரசு பணி செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 20 கோடி வரை பணம் செலவழித்தும் கூட முறையாக தண்ணீர் திறந்து குளங்களை தேக்க முடியவில்லை. இந்த வருடம் கால்வாய்கள், மடைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தரமான கான்கிரீட் போடாமல் தரமற்ற முறையில் பணிகளை பெயரளவில் முடித்தனர்.
இதனால் வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு செல்லவேண்டிய தண்ணீர் முறையாக செல்லவில்லை.
மேலும் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மழை காரணமாக திடீரென வாய்க்காலில் தண்ணீர் திறப்பதாலும், மதகுகளில் அடைப்பு திறப்பு இல்லாத காரணத்தினாலும் வயல்காட்டில் தண்ணீர் புகுந்து பயிர்கள் அழுகி விடுகின்றன.
எனவே முறையாக பணியை செய்து, உடைந்த மடைகளை சீர் செய்து, ஷட்டர் போடவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது பாபநாசம் அணையில் போதிய தண்ணீர் உள்ளது. எப்போது என்றாலும் பாசனத்துக்கு தண்ணீர்திறக்கலாம். எனவே உடனே நடவடிக்கை எடுத்து உடைந்த மடையில் உள்ள ஷட்டர்களை போர்கால நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.