மருதூர் அணைக்கட்டு அமலை செடி அடர்ந்து சாக்கடையாக மாறியதால் குடிதண்ணீர் விஷமாகும் அவலம் & பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா? பசுமை தலைமுறை அமைப்பு கோரிக்கை.
தாமிரபரணி நதியில் 7 வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. அந்த அணைக்கட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு முழுவது புதர் மண்டி கிடக்கிறது. அமலை செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. எனவே தண்ணீர் சாக்கடை கலந்து தூர் நாற்றம் விசுகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் தாமிரபரணி ஆற்றைத் தூய்மை படுததும் பணியை சீவலப்பேரி வரை செய்து முடித்தார்கள். ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை படுத்தும் பணி சரிவர நடைபெற வில்லை. எனவே கலியாவூர் பகுதியில் ஆறு மிகவும் மாசடைந்த நிலையில் காணப்படுகிறது. கலியாவூர் கிராமத்தில் இருந்து மருதூர் அணைக்கட்டு வரையில் அமலைச்செடி தற்போது அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் குடிதண்ணீர் சாக்கடையாக மாறி விட்டது . இதனால் தொற்று நோய் ஏற்படும்அபாய நிலை ஏற்பட்டது. குடிதண்ணீருக்காக கலியாவூர், காலாங்கரை, சின்ன கலியாவூர், அம்பேத்கார் நகர் மற்றும் உழக்குடி பகுதி மக்களுக்கு இங்கிருந்து தான குடிதண்ணீர் செல்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடிக்காக நாலாவது பைப் லைன் திட்டமும் இங்கிருந்துதான் செயல்படுகிறது. இவர்கள் அணைவருக்கும் இங்குள்ள சாக்கடை தண்ணீர் தான் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதன் கீழே தான் முறப்பநாட்டில் விருதுநகர் , கருங்குளம், தூத்துக்குடி குடிதண்ணீர் திட்டம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சியில் கூடன்குளம் கூட்டு குடிதண்ணீர் திட்டம் , கருங்குளத்தில் மூலைக்கரைப்பட்டி கூட்டு குடிதண்ணீர் திட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் சாத்தான்குளம் உடன்குடி கூட்டுகுடி திட்டம் உள்பட பல திட்டங்களுக்காக உறை கிணறு போடப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்படுகின்றன. அணையில் உள்ள அழுகிய அமலை செடியால் இந்த திட்டங்கள் எல்லாவற்றிலும் குடிதண்ணீர் சாக்கடையாக மாறிவிட்டது. இந்த தண்ணீரை தான் மக்களுக்கு வழங்கிவருகிறார்கள். பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்க வாய்ப்பே இல்லாமல் உள்ளது. எனவே இதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதுகுறித்து கலியாவூர் பசுமை தலை முறை அமைப்பை சேர்ந்த பரமசிவன் கூறும் போது
திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கும் போது சீவலப்பேரி வரை மட்டுமே செயல் படுத்தப்பட்டது.. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகளை துவக்கும் போது மருதூர் அணைக்கட்டிலிருந்து முறப்பநாடு,வல்லநாட்டிற்கு செல்லும் ஆற்றினை பெயருக்கு ஒரு நாள் மட்டும் சுத்தப்படுத்தினர். ஆனால் சரியாக சுத்தம் செய்யவில்லை. இங்குள்ள ஆறு நீண்ட நாட்களாக தூய்மைப்படுத்தாத நிலையில் உள்ளதால், தற்போது சாக்கடை கலந்து குடிதண்ணீர் விஷமாகும் நிலையில் நதி உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வந்து பொக்லைன் மூலம் இங்குள்ள அமலைச்செடிகளை அகற்றும்படி கலியாவூர் பொதுமக்கள் சார்பாகவும்,பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்… என்று அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்துக்கு குடிதண்ணீர் கொண்டு செல்கிறார்கள். இந்த குடிதண்ணீர் தற்போது சாக்கடை கலந்து விஷமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந் நிலையை மாற்ற உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.