
தேசிய தென்னக நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு இன்று காலை ஸ்ரீவைகுண்டம் வந்தார். அங்குள்ள கள்ளபிரான் கோவிலுக்கு வந்த அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பிரசார நோட்டீசுகளை வைத்து வணங்கினார். பின்னர் மண்டியிட்டு நடந்தவாறு வழிபாடு நடத்தி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் நிருபரிடம் கூறியதாவது –
நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடுக்கவும் வேண்டி கடந்த 1&ந்தேதி முதல் 100 நாட்கள் குமரி முதல் கோட்டை வரை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் லாப நோக்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் கொண்டு வரப்பட்டவை.
இதன் மூலம் விளைவிப்பதை 4 வயதில் ஒரு ஆண் குழந்தைக்கு கொடுத்தால் 15 வயதில் அவனுக்கு ஆண்மை குறைவு ஏற்படும். 4 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு கொடுத்தால் 15 வயதில் அவள் கர்ப்பம் தரிக்கும் தன்மையை இழக்கநேரிடும் பலவகையிலும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய இத்தகைய விதைகளை தடை செய்ய வேண்டும். இதற்கு பிரதமர் மோடிக்கு கள்ளபிரான் சுவாமி நல்ல எண்ணத்தை வழங்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்பட வேண்டும். இந்த விஷயத்தில் எதிர்கட்சி தலைவரும், அமைச்சர்கள் வேறு வேறு கருத்து கூறுவது ஒருமித்த தன்மை இல்லை. என காட்டிவிடக் கூடாது. டெல்லியில் ஒருமித்த தன்மையோடு இவர்கள் செயல்பட வேண்டும். அனைத்து நதிநீர்களையும் கடலுக்கு செல்லாமல் விவசாய பயன்பாட்டிற்கு திருப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.