தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. வட்டாரத்தலைவர் கோதண்டராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
மத்திய அரசு காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் வேண்டுமென்றே முடக்கி வைத்து அனைத்து மக்களையும் வஞ்சித்து வருகிறது. இந்த நிலை மாறிட கட்சியினரான நாம் கடினமாக உழைத்து வரும் 2019ம் ஆண்டு இளம் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்கிட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்கள் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் மும்பை, குஜராத், கோவை, சென்னை போன்ற வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனை தவிர்த்திட இப்பகுதிகளில் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலான தொழிற்சாலைகளை அரசு அமைத்திட வேண்டும்.
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை, கோவை போன்ற பகுதிகளுக்கு கூடுதலாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை துவங்கிட வேண்டும், இப்பகுதிகளிலுள்ள பெரும்பாலான கிராமப்புறமாணவர்கள், பொதுமக்கள் போதிய பஸ்வசதி இல்லாமல் தினம்தோறும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்த்திட கிராமங்களுக்கு கூடுதலாக பஸ் போக்குவரத்து வசதியினை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்திட வேண்டும். தாமிரபரணி ஆற்றில் மழைக்காலங்களில் அதிகப்படியான தண்ணீர் சேமித்து வைக்க வழியின்றி வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. தண்ணீர் வீணாகுவதை தடுத்திட அணைகள் கட்டி தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்திடுவற்கான நடவடிக்கையை தமிழக அரசு துரிதமாக மேற்கொள்ளவேண்டும்.