151. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
-முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
மணியாச்சி ஜமீன்தார்கள் தீர்ப்பு சொல்லும் விதமே விசேஷமாகத்தான் இருந்துள்ளது.
மற்ற ஜமீன்தார்கள் அரண்மனையில் உள்ள தர்பார் மண்டபத்தில் வைத்து தான் தீர்ப்பு கூறுவார்கள்.
ஆனால் மணியாச்சி ஜமீன்தார் அப்படியல்ல. மணியாச்சி அரண்மனையில் உள்ள கல் வாசலில் அமர்ந்து தான் தீர்ப்பு கூறுவார்கள்.
புகார் கொடுத்துவரை அழைத்து புகார் சம்பந்தப்பட்டவரிடம் நன்கு விசாரிப்பார். அதோடு மட்டுமல்லாமல் சாட்சிகளையும் விசாரிப்பார். மேலும் புகார் கொடுத்தவுடனேயே தனது ஒற்றர்களை அனுப்பி சம்பவம் நடந்த இடத்தில் இருந்து உண்மை நிலையை விசாரித்து வர செய்வார்.
எனவே எவர் தவறு செய்தார் என்பதை ஜமீன்தார் அரண்மனை வாசலுக்கு வரும் முன்பே தெரிந்து கொள்வார். எனவே தீர்ப்பு கூற ஜமீன்தார் தெளிவாக வந்து படியில் அமர்வார். அவருடைய கண்கள் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி கருணையுடனும், தப்புச் செய்தவர்கள் மீது தங்கள் தெய்வமான கொத்தாள முத்துவை போல உருட்டும் விழியுடன் காட்சியளிக்கும்.
இவர்கள் தண்டனையே வித்தியாசமானதாக விளங்கிறது. சிங்கம்பட்டி ஜமீன்தாரை பொறுத்தவரை களவு செய்தவர்களை தோலை உரிக்கும் தண்டனை கொடுப்பார்கள் என கேள்வி பட்டிருக்கிறோம்.
அதாவது ஒருவர் தப்பு செய்தார் என்றால் அவரது உடையை கழற்றி உப்பை ஊர வைத்து அவர் முதுகில் பூசுவார்கள். அதன் பின் சாக்கை அதன் மீது மூடி விடுவார்கள். மறு நாள் சாக்கை எடுக்கும் போது தோல் உறிந்து விடும். அப்படி தோலை உறிக்கும் போது ஏற்படும் வேதனை இருக்கிறதே… அதை எழுத்தால் கூறி விட முடியாது. தண்டனை பெறுபவர்கள் போடும் சத்தம் பொதிகைமலை வரை கேட்கும். இது போன்ற கடுமையான தண்டனை கிடைத்தால் யாரும் தப்பு செய்வார்களா?. இல்லை தப்பு செய்யதான் முயலுவர்களா?. ‘தப்பு பண்ணினா தோலை உறிச்சி புடுவேன்’ என்று பெரியவர்கள் சொல்வார்களே அந்த சொல்லே சிங்கம்பட்டி ஜமீன்தார் கொடுக்கும் தண்டனையால் தான் உருவானது என்பார்கள்.
அதுபோலவே தலைவன் கோட்டை ஜமீன்தாரை பேய்துரை என்று அழைப்பார்கள். அவருக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டால் பிடிக்கவே கிடையாது. குறிப்பாக எங்கேயாவது குழந்தை அழும் சத்தம் கேட்டால் போதும் உடனே அந்த குழந்தையின் தாயாருக்கு பிரம்படி கொடுத்து விடுவார். இவர் மிகப்பெரிய சித்தர். அம்மனை நோக்கி கடுந்தவம் புரிந்தவர். குழந்தை அழுதால் தெய்வமே அழுவது போன்றது என்று கூறுபவர். இதற்கே இப்படி தண்டனை கொடுத்தால் தப்பு செய்தவர்களை விட்டு வைப்பாரா என்ன?
இதுபோல ஜமீன்தார்களின் தண்டனை தப்பு செய்தால் கடுமையாகத்தான் இருக்கும். ஆனால் மணியாச்சி ஜமீன்தார் அப்படி அல்ல.
அவர்களின் தண்டனை இறைவனை சார்ந்தே இருக்கும். அப்படி என்ன தண்டனை–? அவர்கள் வழங்கும் தண்டனைக்கு ஒரு பெயரும் இருக்கிறது.
‘தெண்டம் விடுதல்’ என்பது தான் அதற்கு பெயர்.
அதாவது. தண்டனை பெறுபவர் அவர் செய்த தவறுக்கு ஏற்ப எண்ணெய் வாங்கி வரவேண்டும். அந்த எண்ணெயை கொத்தாளசாமி கோயில் முன்புள்ள விளக்கில் ஊற்றுவார்கள். பின் விளக்கேற்றப்படும்.
அந்த விளக்கு அணையும் வரை தப்பு செய்தவர் விழுந்து விழுந்து வணங்க வேண்டும். இதுதான் தண்டனை. அந்த விளக்கு விரைந்து எரிந்து முடிந்தால் தெய்வம் மன்னித்து விட்டது என்று அர்த்தம். ஆனால் முடியவில்லை என்றால் அவருக்கு மேலும் தண்டனை சாமி கொடுக்கிறது என்பது அர்த்தம்.
இதற்கு பயந்து போய் யாருமே தப்புசெய்யமாட்டார்கள். பயந்து ஓடுங்கி இருப்பார்கள். களவு தொழில் போன்றவற்றை அறவே செய்ய மாட்டார்கள்.
இது ஒரு புறம் இருக்க, ஜமீன்தார் ஆட்சியில் தம்பதிகளை பிரிக்கும் வழக்கை மட்டும் விசாரிக்கவே மாட்டார்கள். தங்கள் ஜமீன் வாழ்க்கையில் ஆணையும் பெண்ணையும் பிரித்தால் அதை விட பெரிய தவறு எதுவுமே இல்லை என்று நினைத்துள்ளார்கள். எனவே வழிவழியாக இந்த தர்மத்தினை கடைபிடித்து வந்துள்ளார்கள்.
மணியாச்சி என்ற பெயருக்கு மற்றுமொரு காரணமும் கூறப் படுகிறது. அதற்கான விளக்கமும் கீழ்கண்டவாறு கூறப்படுகிறது. மதுரையில் மீனாட்சி ஆட்சி என்று கூறுவோம். அதை மீனாட்சி ஆட்சி என்று நினைத்து கொள்கிறோம். அதை வேறு மாதிரி கூறுகிறார்கள். பாண்டிய மன்னன் தனது ஆட்சிக்கு உரிய இடத்தில் அவன் கொடியின் சின்னம்.
அவர் வெற்றி ஆட்சியை தொடரும் தலைநகரம் மதுரை. மதுரையில் பாண்டிய மன்னனின் மீன் கொடி ஆட்சி நடைபெறுகிறது. அதை தான் மீனாட்சி என்று கூறுகிறார்கள். அவன் வணங்கும் தெய்வத்துக்கு மீனாட்சி என்று பெயர் என அழைக்கிறார்கள். அதுபோலவே மணியாச்சி மன்னரின் கொடியில் மணி பொறிக்கப்பட்டிருக்கும்.
மணி கொடி ஆட்சி செய்யும் இடம் மணியாச்சி என்று அழைக்கப்படுகிறது என்ற கூற்றும் நிலவுகிறது என்கிறார் ஜமீன்தாரின் வாரிசு கம்பீரம் அய்யா அவர்கள்.
தற்போது இங்கு அரண்மனை சிறியதாகத்தான் காட்சியளிக்கிறது. அதாவது இந்த இடத்தில் ஏதோ பண்ணையார் இருந்திருக்கிறார் என்பது போலவே தெரிகிறது. ஆனால் முற்காலத்தில் கோட்டை கொத்தளங்களுடன் ஜமீன் அரண்மனை மிகச்சிறப்பாக இருந்துள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் ஜமீன் தலைநகரை அமைக்க எண்ணியுள்ளார்கள்.
இதற்காக சிவலப்பேரியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் சிவலப்பேரியில் மண்கோட்டை கட்ட இயலாது எனவே தற்போது உள்ள இந்த இடத்தினை தேர்ந்தெடுத்து அதற்கு மணியாச்சி என்ற பெயரை சூட்டியுள்ளனர். அதன்பின் இங்கு மிகப்பெரிய மண்கோட்டை கட்டியுள்ளார்கள். அதன் உள்ளே பிரமாண்டமான அரண்மனையை அமைத்துள்ளார்கள். இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இங்கு பிரமாண்டமாக அரண்மனை அமைத்துள்ளார்கள். குறிப்பாக தெற்கு அரண்மனையில் ராணி வசித்துள்ளார். லெட்சுமி விலாசம் என அழைக்கப்படும் வடக்ககு அரண்மனையில் ராஜா வசித்துள்ளார். மேற்கு பக்கமாக அவரது குதிரைப் படை கட்டப்படுவதற்காக குதிரை சாவடி அமைத்துள்ளார்கள். அதன் பின் தர்பார் மண்டபம் மிக பிரமாண்டமான அமைந்துள்ளது.
இது போன்ற சிறப்பான மணியாச்சி அரண்மனையில் தற்போது சிறுபாகம் மட்டுமே உள்ளது. அதற்கு காரணம் மணியாச்சி ஜமீன்தாரின் விடுதலை போரட்டம்.
என்ன மணியாச்சி ஜமீன்தார் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டாரா?
ஆம்..
(இன்னும் வருவார்கள்)