150. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
– முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
மணியாச்சி ஜமீன்தார்கள் வணங்கி வரும் கோயில்களில் மிகவும் சிறப்பான கோயில் மருகால் தலைமலை சாஸ்தா கோயிலாகும். இந்த கோயில் ஜமீன்தார்களின் கோயில் என்று கூட அழைக்கலாம். அந்த அளவுக்கு அதிகமான ஜமீன்தார்களுக்கு இந்த கோயில் குல தெய்வமாக உள்ளது.
குறிப்பாக மணியாச்சி, நெற்கட்டும் செவல், கடம்பூர் ஜமீன்தார்களுக்கு இவர் தான் குலதெய்வம். அது மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்தில் மிக அதிகமானவர்கள் இவரை குல தெய்வமாக கொண்டுள்ளனர்.
ஜமீன்தார்கள் இந்த கோயிலை தங்களது கண்ணின் இமைகளாகவே பாதுகாத்தனர். எனவே பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு திருப்பணிகளை இக்கோயிலுக்கு செய்து வருகிறார்கள் ஜமீன்தார்கள்.
இந்த கோயிலுக்கு சாஸ்தாவை கொண்டு வந்தது மணியாச்சி ஜமீனை சேர்ந்தவர்கள் என்றும். மணியாச்சி ஜமீன் பசுமாடு மூலமாகத்தான் சாஸ்தா வெளியானார் என்றும் நாம் அறிந்தோம்.
இந்த ஆலயத்தில் திருவிழாவே மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. வருடங்தோறும் பங்குனி உத்திரத்தில் பலலட்சம் மக்கள் இங்கு கூடுவார்கள். தாமிரபரணி ஆற்றங்கரையில் சீவலப்பேரி அருகில் மலைமீது அமர்ந்திருக்கும் இந்த கோயிலின் மறுபுறம் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் 2 ஆயிரம் வருடம் பழமையான சமணர் சிறபங்கள் காணப்படுகிறது. வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதை பஞ்ச பாண்டவர்களின் படுகை என்றும் கூறுகிறார்கள். பஞ்ச பாண்டவர்கள் பாஞ்சாலியோடு வனவாசம் செய்தபோது இந்த இடத்தில் தான் தங்கினார்கள் என்ற கூற்றும் உண்டு. அந்த அளவுக்கு மிகவும் பழமையான மலை மருகால்தலை மலை.
ஒரு காலத்தில் மலை மீது உள்ள இந்த கோயிலுக்கு செல்வது கடினம்.
எனவே கோயில் நிர்வாகிகள் படிகட்டி ஏறி செல்லும் பக்தர்கள் இளப்பாறிச் செல்ல நடவடிக்கை எடுத்தனர். கோயில் முன் மண்டபம் கட்டி ராஜகோபுரம் கட்ட நினைத்தனர். இதற்காக கடம்பூர் ஜமீன்தாரும் இந்த திருப்பணியில் சேர்ந்து கொண்டார். கடம்பூர் ஜெகதீஸ் ராஜா, மணியாச்சி ஜமீன்தார் வீட்டில் பெண் எடுத்தவர். எனவே அவரும் மணியாச்சி ஜமீன்தாரோடு திருப்பணியில் சேர்ந்து கொண்டார். பக்தர்களும் இந்த திருப்பணியில் திரளாக கலந்து கொண்டார்கள்.
2013 முதல் 2016 வரை நடந்த திருப்பணியில் கமிட்டியில் ஒருவராக அங்கம் வகித்தார் ஜெகதீஸ் ராஜா. இவர் மணியாச்சி ஜமீன்தாருடன் சேர்ந்து கோயிலுக்கு முன் மண்டபமும், ராஜாகோபுரம் அமைத்தார்.
இதற்கான கல்வெட்டுகள் கோயில் முன்பு உள்ளது. மணியாச்சி ஜமீன்தார் பாலசுப்பிரமணிய ராஜா, சரவண ராஜா, கார்தீஸ் ராஜா ஆகியோருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதுபோல பல திருப்பணிகள் நடந்து இன்று மருகால் தலை சாஸ்தா கோயில் கம்பீரமாக காட்சிதருகிறது.
படிகள் அமைப்பதற்கு உதவியாக கடம்பூர் ஜமீன்தார் மாணிக்கராஜா 50 ஆயிரம் வரை நிதி உதவி அளித்துள்ளார். இதற்கான கல்வெட்டுகள் கோயில் வளாகத்தில் உள்ளது. அதில் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, ரேவதி நாச்சியார் கடம்பூர் ஜமீன் அம்பதாயிரத்து ஒன்று என கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலுக்கு ஜமீன்தார்கள் குடும்பத்துடன் வருவார்கள். ஜமீன்தார்கள் ஆண்ட காலத்தில் ஜமீன்தாரினிகள் கூட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
ஆனாலும் தங்கள் முன்னோர்கள் வணங்கிய சாஸ்தாவை திருவிழாக்களில் காணவேண்டும் என்று பங்குனி உத்திரத்திற்கு கோயிலுக்கு வருவார்கள். உடனே அவர்கள் தங்க மற்றவர்களை போல ஆங்காங்கே திறந்தவளியில் தங்க மாட்டார்கள். மாறாக ஜமீன் பெண்கள் தங்க என்று சிறப்பாக திட்டமிடப்பட்ட குகை போன்ற மண்டபங்கள் அமைப்பு தற்போது கோயில் வளாகத்தில் உள்ளது. அவர்கள் தங்கி செல்ல பூமிக்குள் அமைந்த மண்டபங்கள் அமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குகை மண்டபம் தற்போதும் காணப்படுகிறது. ஆனால் மணல் மூடி பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
மருகால் தலை மட்டுமல்லால் மணியாச்சி கிராமத்தில் உள்ள தெய்வ கோயில்களிலும் மணியாச்சி ஜமீன்தார்களின் திருப்பணி நடந்து வருகிறது.
இந்த இறைபணிதான் மணியாச்சி ஜமீன்தார்களை தலைநிமிர்ந்து வைக்க செய்கிறது. மற்ற ஜமீன்தார்கள் அரண்மனை இழந்து, அரசை இழந்து, நிலங்களை இழந்து வாழ்வதை அவர்கள் வரலாற்றில் மூலம் நாம் கண்டு வருகிறோம். ஆனால் மணியாச்சி ஜமீன்தார் மட்டும், பொன்னும் பொருளையும், புகழையும் இழக்காமல் அவர்களின் ஆலய திருப்பணி மூலமாக ஜமீன்தார் போன்றே தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் மீதும், இவர்களின் அரண்மனை மீது பொதுமக்கள் பற்று வைத்து இருக்கிறார்கள். இதனால் தான் மணியாச்சியில் உள்ள கோயிலில் திருவிழாக்கள் என்றால் ஜமீன்தார் இல்லாமல் திருவிழா நடப்பதே இல்லை.
இங்குள்ள ஒவ்வொரு கோயிலும் மகராஜாவின் பெயரை கூறிக் கொண்டே இருக்கிறது.
அதைபற்றி தொடர்ந்து பார்க்கும் முன்பு ஜமீன்தார் தீர்ப்புசொல்லும் விதமே மிக விசேஷமாக கருதப்படுகிறது. அது குறித்து நாம் காணலாம்.
எல்லா இடத்திலும் ஜமீன்தார் தீர்ப்பு கூறும் இடம் அரண்மனைக்குள்தான் இருக்கும். ஆனால் மணியாச்சி ஜமீன்தார் அரண்மனை வாசலில் உள்ள கல்படியில் அமர்ந்து தான் தீர்ப்பு சொல்வாராம்.
அதோடு மட்டுமல்லாமல் குற்றவாளியை கண்டுபிடித்து அவர்கள் கொடுக்கும் தண்டனையும் வித்தியசமாகத்தான் இருக்கிறது.
அது என்ன தண்டனை?
(இன்னும் வருவார்கள்)