
இதுவரை வணக்கம் மும்பை என்னும் மும்பையில் இருந்து வெளிவரும் வார இதழலில் 146 வாரம் நட்டாத்தி, சாத்தான்குளம், குளத்தூர், சேத்தூர், இளையரசனேந்தல் ஜமீன்தார்கள் குறித்த வரலாறு எழுதி வந்தேன். தற்போது மணியாச்சி ஜமீன்தார் குறித்து எழுதப்போகிறேன். அந்த வரலாற்றை எனது வெப்சைட் மூலமாக உங்களோடு வாரம் வாரம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி.
147. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
&முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
நான் பல ஆண்டுகளாகவே மணியாச்சி ஜமீன் வரலாற்றை பற்றி அறிவதற்காக பல முயற்சிகள் எடுத்து வந்தேன். வசந்த் தொலைக்காட்சியில் மணியாச்சி ஜமீன் வரலாறு படமெடுக்கும் போது நெல்லையில் வைத்து மணியாச்சி ஜமீன்தாரை சந்தித்தார்கள் நமது குழுவினர்.
அவர் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தான் ஜமீன்தார் வாரிசுதாரர் பணியாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தது. நான் ஒருமுறை சென்ற போது அவரை நான் சந்திக்க முடியவில்லை
ஆனால் நமது குழுவினர் அவரை சந்தித்து, வசந்த் தொலைக்காட்சி தொடருக்காக நாள் குறித்து, ஜமீன்தார் வாரிசுதாரை பேச வைத்தார்கள். நான் எட்டயுரம் ஜமீன்தார் தகவல் திரட்ட எட்டயபுரம் சென்ற காரணத்தினால் அவரை சந்திக்க இயலவில்லை. எனவே தான் மணியாச்சி ஜமீன்தார் வரலாற்றை, நான் விகடன் பிரசுரத்தில “நெல்லை ஜமீன்தார்” புத்தகத்தில் சேர்க்க இயலவில்லை.
அதேபோல் தினகரன் ஆன்மிக பலனில் “ஜமீன் கோயில்கள்” தொடர் எழுதும் போது கடம்பூர் ஜமீன்தாரை எழுதி விட்டு, அப்படியே மணியாச்சி வந்து விட்டேன். மணியாச்சியில் திரும்பும் இடங்களில் உள்ள கோயில்கள் எல்லாவற்றிலுமே ஜமீன்தார் வரலாறு மின்னிக் கொண்டிருந்தது.
தற்போது காண்பதற்கு சிறிய ஊராக இருக்கிறது மணியாச்சி. நெல்லை & குறுக்குசாலை சாலையில் மிகச்சிறிய கிராமம் தான். ஒரு போலீஸ் ஸ்டேஷன், இரண்டொன்டு டீ கடை, அப்படியே நடந்து போனால் கூட ஊரை கடந்து விடலாம் அந்த அளவுக்கு மிகச்சிறிய ஊர்தான். இங்குள்ள மக்களும் விவசாயம் செய்ய இயலாத வானம் பார்த்த பூமிக்கு சொந்த காரர்கள். இவர்கள் அனைவருமே ரயில் நிலையத்தினை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறார்கள். மணியாச்சி சந்திப்பு என்றால் நெல்லை & தூத்துக்குடி & மதுரை இணைப்பாக இருப்புப்பாதை இருக்கிறது. இங்கு நின்று செல்லும் ரயிலில் நேரத்துக்கு ஏற்றபடியாக வியாபாரம் செய்வது தான் இவ்வூர் மக்களின் அன்றாட பிழைப்பு.
ரயில் நிலையம் எவ்வளவு பிரபலமோ.. அது போலத்தான் ஜமீன்தாரும் பிரபலமானவர்.
நான் மணியாச்சி ஜமீன்தார் அரண்மனையை பார்த்தேன். சாலைக்கு கீழ்புறம் இருந்தது. தற்போது ஒரு பகுதி மட்டுமே நமக்கு கண்ணில் பட்டது. ஆனால் இந்த அரமண்மனை மிகவும் சிறப்பு பெற்றதாக விளங்கியுள்ளது. ஒரு காலகட்டத்தில் திருச்செந்தூர் வரை மணியாச்சி -ஜமீன் எல்கை விளங்கியுள்ளது.
இதையெல்லாம் அறிந்தோம். ஆனால் ஜமீன்தாரிடம் பேசினால் மட்டுமே முழு விவரம் தெரியும். எனவே கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாக இருந்தது.
ஆனாலும் மனம் தளரவில்லை. எப்படியாவது ஜமீன் கோயில்களில் இதுவரை எழுதாத, சாத்தன் ஜமீன், நட்டாத்தி ஜமீன், குளத்தூர் ஜமீன், கடம்பூர் ஜமீன், சேத்தூர் ஜமீன், சாப்டூர் ஜமீன் எழுதியது போலவே மணியாச்சி ஜமீன்தாரையும் எழுதி விட வேண்டும் என முயற்சி செய்தேன்.
அப்போது தான் ஜமீன்தார் அரசு பதவியில் இருந்து ஓய்வுபெற்று தற்போது செங்கோட்டையில் வசிப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் பல முறை செல்போன் மூலமாக தகவல் சேகரிக்க முயற்சி செய்தும் எழுத இயலாமலேயே போய் விட்டது.
இதற்கிடையில் தொடர் முடிந்தது.
தற்போது சூரியன் பதிப்பகம் ஜமீன் கோயில்கள் தொடரை நூலாக வெளியிட்டு விட்டது.
இனி எப்போது மணியாச்சி ஜமீன்தாரை பற்றி எழுத போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான், எனக்கு செங்கோட்டை நூலகர் ராமசாமி அவர்களுடைய நட்பு கிடைத்தது. முன்னேற்றப் பதிப்பகம் நாகர்கோயிலில் நடத்திய புத்தக கண்காட்சியில் வைத்து தான் நான் அவரை சந்தித்தித்தேன்.
என்னுடைய “தோரணமலை யாத்திரை” நூலை செங்கோட்டை நூலகத்தில் வைத்து திறனாய்வு செய்தார்.
அவர் திறனாய்வே மிக வித்தியாசமாக இருந்தது. தோரண மலை யாத்திரை 30 நூலை வாங்கி அவர் மாணவ மாணவிகளிடம் கொடுத்து அதை படித்து கட்டுரை எழுத வைத்துக் கொண்டிருந்தார்.
என் நூலை 62 பேர் திறனாய்வு செய்திருந்தார்கள். அதன் பிறகு தான் செங்கோட்டை மக்களில் வாசிப்பு ஆர்வம் என்னை பிரமிக்க வைத்தது. அதனால் தான் ராமசாமி அய்யா மீது எனக்கு பற்றுதல் அதிகரித்தது.
அதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளர் சுதாகர் எழுதிய “கவிதை பூக்கள்” நூலை சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் கோதண்டம் அவர்கள் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். அந்த நூல் வெளியிட்டு விழாவிற்கு நான் செங்கோட்டை சென்று இருந்தேன்.
அப்போது தான் மணியாச்சி ஜமீன்தாரை பற்றி விசாரித்தேன். உடனே எனக்கு ராமசாமி அய்யா ஏற்பாடு செய்தார்.
கற்குடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சேகர் அவர்களைத் தான் என்னோடு ஜமீன்தார் வீட்டை காட்டுவதற்காக அனுப்பி வைத்தார்.
சேகர் அவர்கள் பழக இனிமையாக இருந்தார். எங்களை பாசத்துடன் கூட்டிச்சென்றார். அவர் இரு சக்கர வாகனத்தில் முன்னே செல்ல நாங்கள் எனது காரில் பின்தொடர்ந்தோம். வாகனம் நூலகத்தில் இருந்து கிளம்பியது.
மணியாச்சி ஜமீன்தார், செங்கோட்டையில் மணியாச்சி ஜமீன்தாராக வாழவில்லை. அவருக்கு அவ்வூரில் “கம்பீரம்” என்ற பெயர். பலருக்கும் கம்பீரம் என்றால் தான் அவரை தெரிகிறது.
செங்கோட்டையில் நன்கு அறிமுகமானவர் அவர். எல்லோருக்கும் அறிமுகமானவரான அவரை நான் சந்திக்காமல் இருந்தது என் துரதிஷ்டம்.
அவரை பார்க்கவேண்டும் என்ற ஆவல் என்னை தொற்றிக்கொள்ள மேலும் ஆர்வம் அதிகரித்தது. வாகனம் வளைவான பாதை வழியாக சென்று, அதன் பின் திரும்பி மீண்டும் ஒருபிரதான சந்தில் கிளம்பியது.
இருபுறமும் வான் உயர்ந்த மாளிகைள் காணப்பட்டது.
வாகத்தினை ஓரமாக நிறுத்தி விட்டு நாங்கள் சேகர் அவர்களுடன் நடந்து சென்றோம். சிறிது தூரம் நடந்தவுடன் பிரமாண்டமான மாளிகை ஒன்றை அடைந்தோம்.
அந்த இடம் தான் மணியாச்சி ஜமீன்தார் தற்போது வசிக்கும் அரண்மனை.
அங்கே தான் கம்பீரமாக மணியாச்சி ஜமீன்தார் வாரிசு சிரித்த முகத்துடன் முறுக்கிய மீசையுடன் நவீன ஜமீன்தாராக எங்கள் முன் தோன்றி வரவேற்றார்.
(இன்னும் வருவார்கள்)