பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
சாத்தான்குளம் வட்டம், பேய்க்குளம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல்கள் விளைந்து அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யும் வகையில் பேய்க்குளத்தில் விராக்குளம் செல்லும் சாலையில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என தினமணியில் கடந்த 20ஆம்தேதி செய்தி வெளியானது. இந்நிலையில் பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் செல்வமணி தலைமை வகித்து நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தார். தரக்கட்டுப்பாடு இணை மேலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில், மண்டல இணை மேலாளர் கணேசன், கொள்முதல் அலுவலர் சுகிர்தராஜ், பட்டியல் எழுத்தர் இசக்கி, செங்குளம் ஆயக்கட்டு விவசாயிகள்சங்கச் செயலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.