அறிவிக்கப்பட்டு 20 நாள்களாகியும் பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், நெல்லை குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
சாத்தான்குளம் வட்டம், பேய்க்குளம் பகுதியில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் பேய்க்குளத்தில் இருந்து விராக்குளம் செல்லும் சாலையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். இதில், அப்பகுதி விவசாயிகள் அரசு நிர்ணயித்துள்ள விலையில் நெல்லை விற்று பயன்பெறுவர்.
இந்நிலையில், மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடந்த 20 நாள்களுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல, அனைத்து பகுதியிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பேய்க்குளத்தில் மட்டும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லையாம்.
தற்போது 150 கிலோ நெல் மூட்டைக்கு அரசு விலையாக கொள்முதல் நிலையங்களில் ரூ. 2,400 வரை வழங்கப்படுகிறது. கொள்முதல் நிலையம் இல்லாத இடங்களில் 150 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ. 1500 முதல் ரூ. 1700 வரை வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், அப்பகுதி விவசாயிகள் நெல்லை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து செங்குளம் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் வி.எஸ். முருகேசன் கூறியது:
பேய்க்குளத்தில் விவசாயிகள் நலனுக்காக 2 மாதங்களுக்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளதால், விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில விவசாயிகள் நாசரேத் உள்ளிட்ட பகுதிக்குச் சென்று நெல்லை விற்றுவருகின்றனர். பலர் பேய்க்குளத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற ஆவலில் காத்துள்ளனர்.
எனவே, விவசாயிகள் பலன்பெறும் வகையில், பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், விவசாயிகளை திரட்டி பேய்க்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.