பெரியதாழையில் மேலும் ஒரு தூண்டில் வளைவு, மற்றும் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்துதரக் கோரி எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ மீனவளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியதாழை மீனவ சமுதாய மக்கள் அதிகம் வாழும் கிராமமாகும். இப்பகுதி மக்கள் மீன்பிடி தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர். இந்த கடற்பகுதியில் கடல் மண் அரிப்பு அதிகம் ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சாத்தான்குளம் இடைத்தேர்தலின் போது புதிய தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை வைத்தனர். அதனை நிறைவேற்றும் விதமாக ரூ.25.2036 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு 21.02.2015 அன்று அன்றைய சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனால் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது இப்பணி முடிவுற்ற நிலையில் கடல் அரிப்பை முழுமையாக தடுக்கும் பொருட்டு மற்றுமொரு தூண்டில் வளைவு மற்றும் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தர ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதனிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் இன்று 09.02.2018 தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பெரியதாழை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்து, மற்றுமொரு தூண்டில் வளைவு அமைக்கவும் மற்றும் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்துதரக் கோரியும் கோரிக்கை வைத்தார். உடன் பெரியதாழை பங்குத்தந்தை செல்வம், ஊர் கமிட்டியினர் ஜோரிஸ்டன் ஜெகதிஸ், திவால்டர், லாரன்ஸ், பாலஜெயம் ஆகியோர் இருந்தனர்.