
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளது. பெரியதாழையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க தினமும் 400க்கும் மேற்பட்ட படகுகள் சென்று வருகிறது.
பெரியதாழை கடல் பகுதி என்பதால் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. படகுகளும், வலைகளும் சேதமாகுவது வழக்கமாகி விட்டது. இதனால் மீனவர்களுக்கு பண இழப்பு ஏற்படுகிறது.
இதற்காக பெரியதாழையில் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் 2 இடங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த தூண்டில் வளைவு முழுமையாக அமைக்காத காரணத்தால் மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டு கடந்த வாரம் 4 படகுகள் சேதமானது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடல் சீற்றம் காரணமாக 2 மீன்பிடி படகுகள் சேதமாகியுள்ளது. இதுகுறித்து பல முறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெயரளவுக்கு பார்வையிட்டு மட்டுமே சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இதுவரை பெரியதாழை கடல் அரிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிடவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசு மிக விரைவாக பெரிதாழை தூண்டில் வளைவை முழுமையாக அமைத்து மீனவர்களின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.