தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் உச்சிமகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால்(37), இவர் அங்கு கண்ணாடி மற்றும் அலுமினிய பிரேம் கடை நடத்தி வந்தார். இவரது சொந்த ஊர் நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ஆகும். இருப்பினும் தொழில் நிமித்தமாக உடன்குடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் ராஜகோபால் தனது மனைவி கவிதா(30), மகள்கள் இந்துஜா(7), பெனிதா(3) மற்றும் தங்கை முத்துசெல்வி(34), அவரது கணவர் அய்யப்பன்(36) இவர்களது மகள் பூஜா(3) ஆகிய 7 பேரும் நேற்று அதிகாலை சுத்தமல்லியில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக உடன்குடியில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை ராஜகோபால் ஓட்டினார்.
இதேபோல் குரும்பூரில் நடைபெறும் திருமண வீட்டிற்கு சமையல் செய்வதற்காக நெல்லையில் இருந்து ஒரு வேனில் சமையல் குழுவினர் நேற்று அதிகாலையில் சென்றுகொண்டிருந்தனர்.
கருங்குளத்தை அடுத்த புளியங்குளம் விலக்கில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரும் சமையல் குழுவினர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய ராஜகோபால் சம்பவ இடத்தில் பலியானார். காரில் இருந்த கவிதா, இந்துஜா, பெனீதா, அய்யப்பன், முத்துசெல்வி, பூஜா ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாயஜோஸ் தலைமையில் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள், விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த 6 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேனில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராஜகோபால் மகள் இந்துஜா வரும் வழியிலேயே இறந்தார். மற்ற 5 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அய்யப்பன் மனைவி முத்துசெல்விக்கு இருகால்களும் முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வேன் டிரைவரை தேடிவருகின்றனர். இதில் கார், வேன் நேருக்கு நேர் மோதி இடிபாடுகளில் சிக்கிய ராஜகோபாலை சுமார் 1 மணி நேரம் போராடி மீட்பு வாகனம் மூலம் கயிறுகட்டி மீட்டனர். மீட்பு வாகனம் மூலம் கயிறுகட்டி மீட்டனர். இந்த விபத்தால் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.