திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரியில் இருந்து புத்துணர்வு முகாமுக்கு சென்ற கோவில் யானைகள் திரும்பி வந்தன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த 48 நாட்கள் நடந்தது. இதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெய்வானை யானை, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆதிநாயகி யானை, திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் குமுதவல்லி யானை, இரட்டைதிருப்பதி கோவில் லட்சுமி யானை உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் யானைகள் கலந்து கொண்டன.
புத்துணர்வு முகாம் முடிந்ததும், அனைத்து யானைகளையும் தனித்தனி லாரிகளில் ஏற்றி, அந்தந்த கோவில்களுக்கு அனுப்பி வைத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தெய்வானை யானை நேற்று காலையில் லாரியில் வந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், தெய்வானை யானைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை அங்குள்ள கூடாரத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டது.
இதேபோன்று ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆதிநாயகி யானை, திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் குமுதவல்லி யானை, இரட்டை திருப்பதி கோவில் லட்சுமி யானை ஆகியவற்றை ஏற்றி வந்த 3 லாரிகளும் நேற்று காலையில் ஆழ்வார்திருநகரி தெப்பக்குளத்தை வந்தடைந்தன. பின்னர் அங்கு 3 யானைகளையும் லாரிகளில் இருந்து பாதுகாப்பாக கீழே இறக்கினர். கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத் மற்றும் பக்தர்கள் யானைகளுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள கூடாரங்களுக்கு யானைகளை அழைத்து சென்றனர்.