செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு குடியிருப்பு செய்துங்கநல்லூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு நெல்லை – திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ளது.
இங்கு சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கு செய்துங்கநல்லூர் மற்றும் பாளையங்கோட்டைக்கு சென்று வர வேண்டியது உள்ளது. ஆனால் இந்த குடியிருப்பில் டவுண் பஸ் நிறுத்த கூட அனுமதி இல்லை. இதனால் அவசரத்துக்கு செய்துங்கநல்லூர் ஆட்டோவை தான் காவலர்கள் பயன்படுத்த வேண்டியது உள்ளது. இதனால் ஒரு தடவைக்கு குடியிருப்பை விட்டு வெளியே வர 40 ரூபாய் செலவாகிறது.
இங்கு காவலர்கள் குடியேறி 2 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அடிப்படை வசதிகள் கூட செய்துகொடுக்கவில்லை. ஆற்று தண்ணீர் இணைப்பு வசதிகளும் முறைப்படி நடைபெறவில்லை. மின்விளக்கு வசதியும் செய்து தரவில்லை. இதனால் காவலர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மக்களுக்கு இரவு பகலாக காவல் காக்கும் காவலர் குடியிருப்புக்கே பஸ் நிறுத்தம் இல்லை என்பதை யாராலும் சீரணிக்க முடியவில்லை. அரசு போக்கு வரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா?