பல்லங்குழியான வல்லநாடு – கலியாவூர் சாலை சீரமைக்கப்படுமா என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வல்லநாடு – கலியாவூர் சாலை ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது. இந்த சாலை வழியாக கலியாவூர், உழக்குடி, பூவாணி செல்லும் பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் வல்லநாட்டில் இருந்து சிவலப்பேரி துர்க்கையம்மன் , புளியம்பட்டி அந்தோணியார், பாறைக்காடு சாது சிதம்பர சுவாமிகள் ஆலயம், சந்தைபேட்டை தர்கா உள்பட பல ஆன்மிக தலங்களுக்கு இந்த வழியாகத்தான் பயணம் செல்கிறார்கள். தாமிரபரணியின் மிக அழகான மருதூர் அணையை காணவும் இந்த சாலை வழியாகத்தான் சென்றுவரவேண்டும். தூத்துக்குடி நகருக்கு நான்காவது பைப் லைன் கலியாவூரில் அமைந்து உள்ள காரணத்தினால் இங்கு வரும் அதிகாரிகளும் இந்த சாலை வழியாகவே பயணிக்க வேண்டியது உள்ளது. கலியாவூரில் இருந்து கருங்குளம் ஒன்றிய அலுவலகம், ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத்திற்கும் பொதுமக்கள் இந்த சாலையையே பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது.
இதுகுறித்து பசுமைதமிழ் தலைமுறை தலைவர் சுதன் கிறிஸ்டாபர் கூறும்போது, மிக மோசமான நிலையில் கலியாவூர் & வல்லநாடு சாலை உள்ளது இங்கு பயணம் செய்யும் பேருந்துகள் அடிக்கடி பழுதாகும் காரணத்தினால் குறிப்பிட்ட நேரத்துக்கு இந்த வழியாக பஸ் இயங்குவது இல்லை. மேலும் இருசக்கர வாகனங்கள் மோசமான இந்த சாலையில் விபத்தில் சிக்குகிறது. எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கலியாவூர் வல்லநாடு சாலையை உடனே சீர் செய்யவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


