பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும்என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.3 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில் ஒரு ஆசிரியர் உள்ளதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 67 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அந்தோணிமைக்கேல் ராஜ், அவரது மனைவி உள்ளிட்ட 3ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் தலைமை ஆசிரியர் அந்தோணிமைக்கேல் ராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். இதனால் அவரது மனைவியும் நீண்ட விடுப்பில் உள்ளார். இதனால் பள்ளியில் உள்ள 67 மாணவ, மாணவிகளை ஆசிரியை ஜாஸ்மீன் தனியாக கவனித்து வருகிறார். ஒரு மாதமாகியும் புதிய தலைமை ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால் 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் பணிபுரிந்து வரும் ஒரு ஆசிரியரும் வேறு பணிகளை தொடர முடியாமலும் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறார். ஆதலால் கல்வித்துறை அதிகாரிகள் இதனை கவனித்து இப்பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து அந்தோணி மைக்கேல் ராஜ் இப்பள்ளி மாணவர்களை கல்வி மற்றும் விளையாட்டுத்துறையிலும் ஈடுப்படுத்தி ஊக்கப்படுத்தி வந்தார். அவர் இருக்கும்போது கல்வித்தரமும் உயர்ந்து வந்தது. இதனால் பெற்றோர்கள் பன்னம்பாறை பகுதியில் இருந்து வெளி பகுதிக்கு படிக்க சென்ற மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்க ஆர்வமுடன் வந்தனர். ஆனால் தலைமை ஆசிரியர் காலமானது மிகுந்த வருத்தமடைய வைத்துள்ளது. இப்போது இப்பள்ளியில் ஓரே ஆசிரியர் மட்டுமே அனைத்து மாணவ, மாணவிகளை கவனித்து வருகிறார். இதனால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுப்பது பாதிக்கப்பட்டு வருகிறது. ஆதலால் கல்வித்துறை அதிகாரிகள் இதனை கவனித்து தலைமை ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.