நாட்டார்குளத்தில் ஆர்.சி. ஆலயத்தில் உள்ள பீடத்தில் தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் அர்ச்சிப்பு செய்தார்.
நாட்டார்குளம் ஆர்.சி. பங்கு புனித சூசையப்பர் ஆலயத்தில் அர்ச்சிப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் வருகை தந்தார். அவரை நாட்டார்குளம் மாதா கெவி அருகே சபை மக்கள் வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்புக்கு மறை மாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமை வகித்தார். சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு ரெமியூசியஸ் முன்னிலை வகித்தார். நாட்டார்குளம் பங்கு தந்தை இருதயசாமி தலைமையில் மக்கள் அவருக்கு மாலை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதன் பின் அவர் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டார். பின் ஆலயத்தில் புதிய பீடத்துக்கு அர்ச்சிப்பு விழா நடந்தது. இதற்கான சிறப்பு திருப்பலி நடந்தது.
அதன் பின் ஆயர் 50 ஆண்டு இறைப்பணியை முன்னிட்டு பாராட்டு விழா நடந்தது. ஆலய கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவில் அவரை பங்கு மக்கள் கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கு தந்தைகள் செய்துங்கநல்லூர் ஆரோக்கிய லாசர், தைலாபுரம் ஜெயசீலன், பாளையஞ்செட்டிகுளம் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.