![](https://www.muthalankurichikamarasu.com/wp-content/uploads/2018/10/20-sey-3.jpg)
நதிநிலைகளை பாதுகாக்க பொதுமக்கள் முன் வரவேண்டும் என முறப்பநாடு புஷ்கர விழாவில் நீராடிய ச.ம.க. தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
மகா புஷ்கர விழா தாமிரபரணி ஆற்றில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. குரு தலமாக போற்றப்படும் முறப்பநாடு நதியில் மிக அதிகமான பக்தர்கள் நீராடி வருகிறார்கள். இந்நிலையில் முறப்பநாட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் நீராடினார். அதன்பின்னர் கைலாசநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவர் செய்தியாளர் தெரிவித்ததாவது.
மகாபுஷ்கரத்தில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நதியின் புனிதத்தை உணர்ந்தும் இந்த பகுதியில் மிக அதிகமான பக்தர்கள் நீராடுகின்றனர். இந்த நதியில் ஆண்டுதோறும் புஷ்கர விழா நடந்தாலும் சரி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாலும் சரி, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாலும் சரி, பொதுமக்களின் ஊக்கத்துடன் கலந்துகொள்வது அவசியம். இதுபோன்ற விழாக்கள் நடைபெறும் போதுதான், மிக அதிகமான நலத்திட்டங்கள் செயல்படும். தற்போது கூட முறப்பநாட்டில் அரசு சார்பில் சாலை வசதிகளும், உடைமாற்றும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நதியை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. பொதுமக்களாகிய நாமும் அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். தண்ணீரை குடித்து விட்டு பாட்டில்களை ஆற்றில் வீசுவது, உடைகளை ஆற்றில் விடுவது, பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றில் விடுவது போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாப்பது மக்களின் கடமையாகும். அரசும் மக்களோடு மக்களாக இணைந்து இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதுணையாக இருக்கும். சீமைக் கருவேலமரங்களை வெட்டி விற்பது முன்னொரு காலத்தில் தொழிலாக இருந்தது. ரஷ்யா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு இது பயன்பட்டது. மேலும் அடுப்பு எரிப்பதற்கும் பயன்பட்டது. தற்போது அதற்கு மதிப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே கருவேலமரங்களை அகற்றும் பணியை துரிதமாக அரசு மேற்கொள்ள வேண்டும். புஷ்கரவிழாவை அரசுவிழாவாக கொண்டாட வேண்டிய அவசியமில்லை. புஷ்கர விழா இறைவனுக்காக கொண்டா டப்படுவது. அரசு அதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை செய்து கொடுத்தாலே போதுமானது. சபரி மலையை பொறுத்தவரை , ஆகமவிதிகளின் படி உருவாக்கப்பட்டிருக்கின்ற எந்தவித ஸ்தலங்களில் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கின்ற பாரம்பரியத்தையும் நம்பிக்கையும் உடைக்கின்ற மாதிரி உள்ளது இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். என்று பேட்டி அளித்தார்.
அவருடன் மாநில துணை பொதுசெயலாளர் சுந்தர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் குருஷ் திவாகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாலமோன், நெல்லை மாநகர செயலாளர் சேவியர், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன், அவைதலைவர் ஜெயகோபால், தெற்கு மாவட்ட அவை தலைவர் எஸ்.ஆர்.சங்கர், கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் , ஸ்ரீவைகுண்டம் தேவராஜ், சாத்தான்குளம் ஜான்ராஜ், ஆழ்வை டென்சிங், நெல்லை மாநகர மாவட்ட பொருளாளர் சரத்ஆனந்த உள்பட பலர் கலந்துகொண்டனர். கருங்குளம் ஒன்றிய துணை செயலாளர் அந்தோணி சிலுவை, இளைஞரணி யாகோபு, விவசாய அணி பரமசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.