பாளையங்கோட்டை பகுதியில் பண்டைத் தமிழர்களின் நடுகல் வழிபாடும் மற்றும் கிராமியத் தெய்வங்களும் முக்கியத்துவம் பெறுவது போன்றே, தமிழ் நாட்டிலேயே வித்தியாசமாக ‘தசரா’ பண்டிகையைச் சிறப் பாகக் கொண்டாடும் இடங்களில் ஒன்றா கவும் இருக்கிறது. இங்கு ‘தசரா’ பண்டிகை கொண்டாடும் பழக்கம் சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு 15 முக்கியக் கோயில்கள் இப்பகுதியில் உள்ளன. பெரும்பாலும் அம்மன் கோயில் களிலேயே தசரா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. ‘பாளையில் நாட்டுப்புற வழி பாட்டைப் பொறுத்தவரை, தசரா பண்டிகை கொண்டாடும் கோயில்கள், ஏனைய கோயில்கள்’ என இரு பிரிவுகள் உள்ளதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முல்லை முருகள் குறிப்பிடுகிறார்.
தசரா கொண்டாடும் கோயில்களில் பாளை ஆயிரத் தம்மன் கோயில், உச்சிமா காளியம்மன் கோயில், பேராச் சியம்மன் கோயில், முப்பிடாதி யம்மன் கோயில், முத்தாரத்தம்மன் கோயில், உலகம்மன் கோயில் ஆகியன முக்கியக் கோயில்கள் ஆகும். இங்குள்ள காந்தாரி அம்மன், மாரியம்மன், பாப்பாத்தி அம்மன், பத்திரகாளியம்மன், பேச்சியம்மன், சந்தனமாரியம்மன், அங்காள பரமேஸ்வரியம்மன், எல்லையம்மன். திரெளபதியம்மன் ஆகிய அம்மன்கள் தசராவின்போது விழா காண்கின்றனர்.
புரட்டாசி மாதம்தான் தசரா கொண்டாடப்படுகிறது என்ற போதும், இங்குள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் முளைப்பாரி எடுக்கும்போதே, தசராவுக்கான களைகட்டத் தொடங்கிவிடுகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழக்கம் தமிழகத்தில் உள்ளது. அதாவது பருவமழை தொடங்கும் முன்னர் ஆடி மாதத்தில் காற்று அடிக்கும் போதே விதை, விதைக்கத் தொடங்கிவிடுவர். இதற்காக, சேமித்து வைக்கப்பட்டுள்ள நவதானிய விதைகளை ஆடி மாதத்தின் மூன்றாம் அல்லது நான்காம் செவ்வாய்க்கிழமையில் 9 கிண்ணங் களில் போட்டு, அம்மன் முன் வைத்து, தொடர்ந்து ஒரு வாரம் சுமங்கலிப் பெண்கள் நீரூற்றி வருவர். பின்னர் முளைப்பாரி வளர்ந்ததும், அதாவது கடைசிச் செவ்வாய்க் கிழமை அன்று (ஆடி மாதத்தின் நான்காம் அல்லது ஐந்தாம் செவ்வாய்), பெண்கள் அதனை முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச்சென்று தாமிரபரணி ஆற்றில் கரைத்து விட்டு வருவார்கள். பொதுவாக, தாம் சேமித்து வைத்துள்ள நவதானிய விதைகளின் தரத்தைப் பரிசோதிக்கவும், பருவ காலத்தில் நல்ல மழை பொழிய வேண்டும் வகையிலும் முளைப்பாரி விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. முளைப்பாரி வளர்வதை வைத்து அந்த வருடப் பலன்கள் குறித்துப் பூசாரிகள் குறிசொல்வதும் உண்டு. இவ்வாறு முளைப்பாரியில் தொடங்கும் அம்மன் கோயில் விசேஷம் தசரா வரை தொடர்கிறது.
முளைப்பாரியைத் தொடர்ந்து ஆனி மாதத்தில் வரும் அமாவாசையில் அம்மனுக்குச் சிறப்பு அபிசேகம் நடைபெறும். அன்று அதிகாலையில் மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், கரும்பு, பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் இந்த அபிசேகம் நடைபெறும். அதன் பிறகு தசரா கொடியேற்றம் நடைபெறுகிறது. சுமார் 30 அடி உயரம் கொண்ட கம்பத்தினைக் கழுவி சிவப்பு வண்ணம் பூசி, ஒரு சிவப்புத் துணியில் சிங்கம் வரையப்பட்டுள்ள கொடியைக் கம்பின் நுனியில் கட்டி, அதனைக் கோயில் முன்பு நடுவர். பின்னர் அக்கொடிக்கம்பத்தை அனைவரும் வழிபடுவார்கள். இதனை, பெரிய கோயில்கள் போன்று கொடியேற்றம் என்றே அழைக் கின்றனர். இக்கொடியேற்ற நாளின்போது, புரட்டாசி அமாவாசைஅன்று தொடங்க விருக்கும் தசரா விழாவிற்கு நாள் குறிக்கும் நிகழ்வும் நடைபெறும். கோயில் பூசாரி மற்றும் ஊர்ப்பெரியவர்கள் இதில் கலந்து பேசி முடிவு செய்வார்கள். அப்போது கோயில் விழா தொடர்புடைய அனைவருக்கும் மரியாதை செய்யப்படும்.
தசரா நாட்களான 10 நாட்கள் மட்டுமல்லாது, அதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பூப்பல்லக்கு, ஊஞ்சல் ஆகிய வைபவங்களை முன்னின்று நடத்த முன்வருபவர்கள், மற்றும் கட்டளைதாரர்கள் இருந்தால் அவர்களுக்கும் இப்போதே மரியாதை செய்யப்படும். அவ்வாறு மரியாதையை ஏற்க முன் வராதவர்கள் இருந்தால் அவர்கள் பெயர் கட்டளைதாரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அக்கட்டளைகள் வேறு ஒருவருக்கு மாற்றிவிடப்படும். மேலும், விழாவுக்கான முன்னேற் பாடுகளை உறுதி செய்யும் வகையில், பந்தல்காரர், பூக்காரர், மேளக் கோஷ்டிகள், வில்லுப்பாட்டு, கணியன்கூத்து, கரகாட்டக் கோஷ்டி, சப்பரம் தூக்குவோர், அலங்காரம் செய்வோர் ஆகியோருக்கு முன்பணம் வழங்கப்படும். முன்பணம் பெற்ற வர்கள் பின்னர் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
முதல் நாள் தசரா பண்டிகையின் போதும், பத்தாம் நாள் தசரா பண்டிகையின்போதும், அதன் பிறகு பூப்பல்லக்கில் சப்பரத்தின் முன்பும் சாமி ஆடிகள் மஞ்சள் ஆடை அணிந்து கையில் குடம், கொப்பறை, வேப்பிலைக்கம்பு ஏந்தி மேளதாளத்துடன் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குடத்தில் நீர் மொண்டு வருவார்கள். குடத்தில் மஞ்சளும், வேப்பிலையும் இடப்படும். சாமி ஆடிகள் இக் குடங்களைக் கோயிலுக்கு எடுத்து வருவர். அந்த நீரால் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். அதன் பிறகு உற்சவ அம்மன் சப்பரத்தில் வைத்து அலங்கரிக்கப்படும். தீர்த்தவாரி சென்று வரும்போது தலைவிரித்த நிலையில் அம்மன் அலங்கரித்து வைக்கப்படும். இதேபோல தசரா முதல் நாளன்றும், பத்தாம் நாளன்றும் அம்மனுக்குப் பால்குடம் எடுக்கப்படும். அம்மை நோய் கண்டு பிழைத்தோர், தீராத பிணியில் தேறியோர், திருமண விருப்ப முடையவர்கள் பால்குடம் எடுப்பார்கள். பொதுவாக அம்மனுக்கு நேர்ந்து கொள்வதன் அடிப்படையில் பால்குடம் எடுக்கப் படுகிறது. அப்போது அம்மன் முக்கிய வீதிகளில் வலம் வருவாள்.
அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உலா வரும்போது அதன் முன்னர் பால்குடம் எடுப்பவர்களும் செல்லும் வழக்கம் காணப் படுகிறது. இச்சப்பர அலங்காரத்தில் கோயில்கள் இடையே போட்டிகள் இருப்பதையும் காணலாம் என்கிறார் முல்லை முருகன்.
அதே சமயம் இங்குள்ள அம்மன்கள் அனைவரும் சகோதரிகள் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. வண்ணாரப் பேட்டை தாமிரபரணிக் கரையில் உள்ள பேராச்சியம்மன் சப்பரம் தான் முதலில் எழுந்தருள்கிறது. அதன் பிறகு மற்ற கோயில்களில் இருந்து அம்மன் சப்பரங்கள் புறப்படும். அதாவது பேராச்சி யம்மன் தனது மூத்த சகோதரி ஆயிரத்தம்மன் கோயிலுக்கு வந்தவுடன் தான் மற்ற சப்பரங்கள் புறப்பாடு தெடங்கும். பத்தாம் நாளின்போது அனைத்துச் சப்பரங்களும் அணிவகுத்து முக்கிய வீதிகளில் சென்று, அதிகாலையில் ராமசாமி கோயில் திடல் வந்தடையும். இவ்வாறு ஒரே நேரத்தில் அனைத்து அம்மன்களும் காட்சி கொடுக்கும்போது அனைத்து அம்மன்களுக்கும் கற்பூர ஆரத்தி எடுக்கப்படும். பின்னர் பகல் 2 மணிக்கு அனைத்து அம்மன்களும் எருமைக்கடா பலி மைதானத்தில் எழுந்தருளு வார்கள். தற்போது எருமைப்பலி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், ஆடு பலி போன்றவை நடைபெறுவதாகத் தெரிகிறது. அதன் பிறகு மாலை 6 மணிக்கு வடக்குக் கடைப்பகுதித் திடலில் சூரசம்காரம் நடைபெறும். அதன்பிறகு அந்தந்த அம்மன் சப்பரங்கள் தங்கள் கோயில்களைச் சென்றடையும். அதன் மறுநாள் பூப்பல்லக்குடன் தசரா நிறைவடையும்.
தசரா பண்டிகையின் போது, 2ஆம் நாள் முதல் 9 ஆம் நாள் வரை அந்தந்த அம்மன் கோயில்களில் பெரிய கோயில்கள் போல் கொலு நடைபெறும். கோயில்களில் இதற்காக அமைக்கப் பட்டுள்ள கொலுமேடையில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் அந்த நாளின் கட்டளைதாரர் வசதிக்கேற்ப பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். 9 ஆம் நாள் சரஸ்வதி பூஜை அன்று கையில் வீணை ஏந்திய சரஸ்வதி அலங்காரம் அனைத்துக் கோயில்களிலும் ஏகமாக நடைபெறும்.
இவ்வாறு பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிராமியக் கோயில்களில் தசரா பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதனால் பெருந்தெய்வ வழிபாட்டு முறைகளும், சிறு தெய்வ வழிபாட்டு முறைகளும் இங்கு கலந்துள்ளன. சாமியாடுதல், பலி கொடுத்தல், குறி சொல்லுதல் போன்றவையே வழக்கமான கிராமக் கோயில் களில் வழிபாட்டின்போது பின்பற்றப்படுகிறது. இத்துடன் பெருந்தெய்வ வழிபாட்டு முறைகளும் கலந்து இங்கு தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது குறித்து பல்வேறு நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
(நதி வற்றாமல் ஓடும்)


