
நண்பர் சுமு முருகன் சுரண்டையை சேர்ந்தவர். சுரண்டை புத்தக கண்காட்சியில் விருது வாங்குவதற்காக வந்தவர். அதன் பின் முகநூலில்தான் அவருடைய தொடர்பு . எப்போது முகநூலை பார்த்தாலும் மரக்கன்று நடுதல், குருதி கொடை வழங்குதல் என சமூக வளைதளத்தினை மிக பொறுப்பாக கையாள்வார். குழந்தைகளை அறிமுக படுத்தும் போதே சமூக அக்கறை அவரிடம் உண்டு. நேற்று முன்தினம் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை போகிறேன் என ஒரு பதிவிட்டிருந்தார். சரி.. நம்ம ஊரை தாண்டி தானே போகிறார். அவரை சந்தித்து விடுவோமே என அவரிடம் எனது செல் எண்ணை பகிர்ந்து கொண்டேன். குறிப்பிட்ட நேரத்தில் செய்துங்கநல்லூரில் எனது ஸ்டுடியோவில் என்னை சந்தித்தார்.
அவர் ஏற்கனவே செய்துங்கநல்லூருக்கு அறிமுகமானவர்தானாம். விளம்பரம் எழுத வந்துள்ளாராம். அவர் என்னிடம் , ‘ஸார்.. செய்துங்கநல்லூர் அழகான கிராமம். ஆனால் இவ்வூரில் சாக்கடை மிக அதிமாக இருக்கிறது. ஒரு நாள் உள்ளூர் இளைஞர்களை கூப்பிடுங்கள்.. நாங்களும் வருகிறோம். சாக்கடைகளை அகற்றி விடுவோம்’ என்றார்.
புல்லரித்து போய் விட்டேன். எங்கோ இருந்து வந்தவர், நமது ஊரைபற்றி பேசுகிறார் என்ற போது எனக்கு பெருமையாக இருந்தது. முதல் கட்டமாக.. தை பூசத்துக்கு செல்லும் பாதயாத்திரை பாக்தர்கள் போட்டு விட்டு செல்லும் பிளாஸ்டிக் கப்பை அப்புறப்படுத்துவோம். அவர்களை பிளாஸ்டிக் பொருள்களை ஆங்காங்கே போட விடாமல் தடுப்போம் என பேசிக்கொண்டோம்.
அதற்குள் அவருக்கு பல போன் கால்கள், அவை எல்லாமே… குருதிகொடையை பற்றித்தான். நண்பர் செய்துங்கநல்லூரை சேர்ந்த குருதி கொடையாளர் வந்தார். அவரிடம் பேசி இருவரும் எண்ணை பெற்றுக்கொண்டனர். மாவட்டம் முழுவதும் உதவலாமே.. என தொடர்ப்பு ஏற்படுத்தி கொண்டார்கள்.
ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. சமுத்திர கனி அய்யா அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு பேச வைத்தேன். சுரண்டை முதலாம் வார்டு பாபநாசம் தான் டிஎஸ்பியின் சொந்த ஊர். அந்த ஊரைப்பற்றி எழுத வேண்டும் என பல நாள்களாக டி.எஸ்.பி என்னிடம்பேசிக் கொண்டிருக்கிறார். சுமு முருகன் அவர்களின் உதவியுடன் அந்த நூலை வெளியிட உறுதி எடுத்துக் கொண்டோம்.
சுமார் 20 நிமிடம் பரபரவென்று பேசி விட்டு, காவடியை தூக்கி கொண்டு மீண்டும் நடைபயணத்தினை துவங்கினார் சமூக சேவகர்(முருக பக்தர்) சுமு முருகன்.