தற்போது ஒட்டபிடாரம் தொகுதி எங்கும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. தொடர்ந்து அனைத்து கட்சியில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் வருவதால் தேர்தல் களைகட்டி விட்டது. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கட்சியினரும், தங்கள் தலைவர்களுக்கு கூட்டம் அதிகம் கூட்டி காட்ட வேண்டும் என மக்களை திரட்டி வருகிறார்கள். இதற்கு நபர் ஒருவருக்கு 100 முதல் 500 வரை கொடுத்து வருகிறார்கள். எனவே கிராமத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்சி காரர்களை எதிர்நோக்கி காத்து கிடக்கிறார்கள். தங்கள் குடும்பத்தில் உள்ள தொகுதியில் அல்லாத மற்றவர்களுக்கு ஓட்டு இல்லாவிட்டாலும் கூட பராவாயில்லை இங்கு வந்தால் தினமும் 200 வரை சம்பாதிக்கலாம் என அவர்களை வரவழைத்து உள்ளார்கள். கோடை விடுமுறையை அனுபவித்த மாதிரியும் ஆச்சி. சம்பாதித்த மாதிரியும் ஆச்சி. சினிமாவில் துணை நடிகர்கள் போலவே இவர்களை அழைத்து வர கிராமத்துக்கு கிராமம் ஏஜெண்ட்களும் உருவாகி விட்டனர். அவர்களுக்கு ஒவ்வொரு கட்சிக்கு தக்க எப்படி கோஷம் எழுப்ப வேண்டும் என பயிற்சி கொடுத்து அழைத்து வரப்படுகிறார்கள். இதுபோல வரும் நபர்களும் தங்கள் ஏஜெண்ட் மனம் குளிர தலைவர் வரும் வேளையில் வாழ்த்துகோஷம் எழுப்பி செல்கிறார்கள். அப்ப தானே அடுத்த கூட்டத்துக்கு சான்ஸ் கிடைக்கும். இதை காணும் தலைவர்களும் அனைவர் வாக்கும் நமக்குதான் என நம்பிக்கையுடன் செல்கிறார்கள். பாவம் அவர்களுக்கு கூட இது காசுக்காக சேர்க்கப்பட்ட கூட்டம் என புரிய வாய்ப்பில்லை. இந்த காட்சிகளை எல்லாம் பஜாரில் இருந்து பார்க்கும் வியாபாரிகள் , ‘அடிக்கிற வெயிலுல தாக்குபிடிக்க முடியலையப்பா, அதோட எல்லா கட்சிக்கும் பணம் வாங்கி வந்து கோஷம் போடும் இந்த நபர்களின் கொடுமை அதை விட தாங்க முடியலையப்பா’ என அங்கலாய்த்து கொள்கிறார்கள்.
?