தெய்வச்செயல்புரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து எலக்ட்ரிசன் பலி.
தெய்வச்செயல்புரம் அருகே உள்ள சீத்தார்குளத்தைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் நடராஜன்(53). இவர் எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறார். தோட்டத்தில் பழுதான மோட்டார்களை இவர் பழுது பார்த்தை வழக்கமாக கொண்டிருந்தார். குடிப்பழக்கம் கொண்டவர். இவர் நேற்று முன்தினம் மாலை குடித்து விட்டு தோட்டத்தில் மோட்டார் பழுது பார்த்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றுக்குள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிணற்றில் பார்த்த போது அங்கு நடராஜன் விழுந்து கிடந்தார். குறைந்த அளவில் தண்ணீர் கிடந்ததால் நடராஜன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பொதுமக்கள் உடனே ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் நடராஜனை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். எலக்ட்ரிசன் நடராஜனுக்கு மனைவியும் 1 ஆண்குழந்தை, 3 பெண்குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண்குழந்தைகளுக்கு திருமணம் முடிந்துள்ளது.