
தூத்துக்குடி மாவட்டத்தில் மகா புஷ்கரம் நடைபெறும் 6 இடங்கள் உள்பட 20 இடங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மகா புஷ்கரம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். இவர் முறப்பநாடு, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல், முக்காணி ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். அவர் கருங்குளத்தில் வைத்து நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி 60 கிலோ மீட்டர் பாய்கிறது. இந்த நதியில் மகா புஷ்கர திருவிழா முறப்பநாடு, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல், முக்காணி ஆகிய இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விடத்தில் அணுகு சாலை அமைப்பு, தற்காலிக கழிவறை, உடைமாற்றும் அறை உள்பட முக்கிய வேலைகள் நடைபெறும். தாமிரபரணி ஆற்றில் குளிப்பவர்களுக்கு பாதுகாப்பாக வலை கட்டப்பட்டு, அவர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வண்ணம் கண்காணிக்கப்படுவர். இதற்காக படகு மூலம் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்படுவர். மேலும் நீச்சல் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சுமார் 3 ஆயிரம் போலிசார் தூத்துக்குடி மாவட்டத்தில் விழாவிற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் இந்த இடங்களை தவிர 20 இடங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அந்தந்த பகுதி பொதுமக்கள் புஷ்கர விழா நடத்துகிறார்கள். அவர்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என் அவர் கூறினார்.
அவருடன் மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா, ஸ்ரீவைகுண்டம் தாசில் தார் சந்திரன், டி.எஸ்.பி சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீவைகுண்டம் வெங்கடேஷ், செய்துங்கநல்லூர் சோமன்ராஜன், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் அய்யனார், கருங்குளம் கிராம நிர்வாக அதிகாரி கந்த சுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.