தூத்துக்குடி மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் குளங்கள் ஒரு புறம் இருக்க இரண்டு நாள்களாக கடலுக்கு வீணாக செல்லும் தாமிரபரணி ஆற்று தண்ணீரை நிரப்ப போதிய நடவடிக்கை அதிகாரிகள் எடுக்கவில்லை.
கேரளத்தில் பெய்து வரும் பருவ மழையின் தாக்கத்தால் நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, குண்டாறு உள்பட 8 அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பாபநாசம் அணை 142 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 4 ஆயிரம் கன அடிநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
156 அடி கொண்ட சேர்வலாறு அணைக்கட்டு தற்போது 147 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து 9 ஆயிரம் கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனா நதி, ராமாநதி ஆகிய அணைகளும் நிரம்பி அவற்றில் இருந்து சுமார் 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் அனைத்தும் தாமிரபரணியில் கலக்கிறது. இதனால் தாமிரபரணியில் 20 ஆயிரம் கனஅடி நீர் வெள்ளமாக செல்கிறது. ஒரு நாளில் 11 ஆயிரம் கனஅடி நீர் சென்றால் அது ஒரு டிஎம்சி தண்ணீராக கணக்கிடப்படும். தற்போது இரண்டு தினங்களாக 20 ஆயிரம் கன அடி வீதம் வெளியேறுவதால் 3 டிஎம்சி வரை கடலுக்கு வீணாக செல்கிறது.
இருப்பினும் நெல்லை மாவட்டத்தில் 6 அணைக்கட்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 அணைக்கட்டும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு மூலமாக மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மூலமாக வடகால் தென்கால் ஆகிய கால்வாய் வழியாக 46 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இங்கு சுமார் 53க்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன.
அந்த குளங்களில் 10 சதவீத குளங்கள் கூட முழுமையாக தண்ணீர் நிரம்ப வில்லை. அதை நிரப்புவதற்கான நடவடிக்கையும் இல்லை. மேலும் நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பார்வையிட்ட மாவட்ட ஆட்சி தலைவர் சந்திப் நந்தூரி சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என கூறினார்கள். ஆனால் நேற்று காலை 12 மணி வரை சடையனேரி கால்வாய் வறண்டு தான் கிடந்தது. மேலும் இதற்காக தண்ணீர் தேக்கி வைக்ககூடிய கால்வாய் குளம் 20 சதவீதம் கூட நிரம்ப வில்லை.
இதுகுறித்து பேய்குளம் நிழல்கள் அறக்கட்டளை இயக்குனர் அந்தோணி ஜெயசிங் கூறும் போது, மேலும் வெள்ளக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் இருப்பதற்காக சடையனேரி கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. உடன்குடி பகுதிக்கு செல்லும் அந்த திட்டம் வழியாக சுமார் 50 க்கும் மேற்பட்ட குளங்கள் பயன்பெறும். ஆனால் அந்த பகுதிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தகவல் கூறிய படி தற்போது வரை தண்ணீர் செல்லவில்லை. மேலும் அதிகாரிகள் முறையாக தண்ணீர் பகிர்மானத்தினை கையாளதா காரணத்தினால் தான் இது போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. கேரளாவில் மழை பெய்கிறது. 100 அடிக்கு மேல் பாபநாசத்தில் தண்ணீர் இருக்கிறது என்றவுடனே படிப்படியாக தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன குளங்களை நிரப்பி இருக்க வேண்டும். ஆனால் அது வரை கைகட்டி வேடிக்கை பார்த்த அதிகாரிகள் இறுதியில் தாமிரபரணிக்கு கிடைத்த உபரி தண்ணீரை கடலில் விட்டு விட்டு குளங்களில் நிரப்பாமல் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கூறினார்.
தண்ணீரை திறந்து விடுவது தடுப்பது போன்றவைகளை அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகளே தேர்வு செய்து விடுவார்கள். ஆனால் தற்போது அந்த அதிகாரம் முழுவதும் சென்னைக்கு வழங்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு தகவலையும் அங்கு தெரிவித்து அனுமதி பெற்ற பின்னரே திறந்து விடமுடிகிறது. எனவே தான் முதல்வர் உத்தரவை எதிர்பார்த்து காத்து இருக்க வேண்டியிருக்கிறது. இதனால் தான் இதுபோல ஏற்படுகிறது என் தகவல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலமாக பேசப்பட்டு வருகிறது.
மருதூர் மேலக்காலில் மிகப்பெரிய குளங்களான வெள்ளூர் குளம், தென்கரைக்குளம், நாசரேத்தை சுற்றியுள்ள 5 குளங்கள் நிரம்ப வில்லை. மருதூர் கீழக்காலில் உள்ள சிவகளை குளம், பேரூர் குளம், பெருங்குளம் போன்ற குளங்களுக்கு 10 சதவீத தண்ணீர் கூட வந்து சேரவில்லை. ஸ்ரீவைகுண்டம் தென்காலில் கடம்பா குளம் உள்பட பல குளம் நிரம்ப வில்லை. வடகாலில் கடைசி குளமான கோரம்பள்ளம் குளத்துக்கு தாமிரபரணி தண்ணீர் போய் சேரவில்லை. எனவே அதற்கான நடவடிக்கை உடனே எடுக்கவேண்டும்
இப்பகுதி குளங்களை நிரப்ப 5 ஆயிரம் கன அடி நீரே போதும்£னது. ஆனால் 22 ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.