தூத்துக்குடியில் போலீசாரின் வாகன சோதனையால் பைக்கில் சென்ற கொத்தனார்கள் இருவர் படுகாயம் அடைந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காரச்சேரியைச் சேர்ந்தவர்கள் லெட்சுமணப் பெருமாள் (35), சங்கரலிங்கம் (28), இவர்கள் இருவரும் கொத்தனராக வேலை பார்த்து வருகின்றனர். நேற்றிரவு இவர்கள் இருவரும் வேலை முடிந்து தட்டப்பாறை விலக்கில் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு பைக்கில் வந்த புதுக்கோட்டை தலைமைக் காவலர் ஜெயசுந்தரி அவர்களது பைக் மீது மோதி பைக்கை நிறுத்தினராம்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லெட்சுமணப்பெருமாள், சங்கரலிங்கம் ஆகிய இருவருக்கும் அங்குள்ள தடுப்புச்சுவரில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகன சோதனைக்காக போலீசார் பைக்கால் மோதியதால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டி அரசு மருத்துவமனையில் முற்றுகை யிட்டுள்ளனர்.
மேலும், இருவரும் இறந்து விட்டதாகவும், அதனால் டாக்டர்கள் சிகிச்சையை நிறுத்திவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.பின்னர் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு, விவிடி சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் முத்து, அரிஹரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
காயம் அடைந்த இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அங்கு பரபரப்பு நிலவியது.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது,வாகன சோதனை நடைபெற வில்லை. இது தற்செயலாக நடைபெற்ற விபத்து தான் என்று தெரிவித்தனர்.