திருவைகுண்டம் அருகே சாஸ்தா கோயில் பாதுகாப்பு பணிக்கு சென்ற எஸ்ஐ மற்றும் ஏட்டுவை கும்பல் தாக்க முயற்சித்தது. அவர்கள் துப்பாக்கியை காட்டியும், லத்திசார்ஜ் செய்தும் உயிர் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அடுத்த கருங்குளத்தை யொட்டி கால்வாய் கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற நம்பி சாஸ்தா கோயில் உள்ளது. நேற்று முன்தினம் பங்குனி உத்திரம் என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. செய்துங்கநல்லூர் எஸ்.ஐ சதீஷ், ஏட்டு தர்மேந்திரபாண்டியன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது கால்வாய் அறுமுகநயினார்(55) மகன் இசக்கிபாண்டி(25) என்பவர் கோயிலுக்கு வந்த இளம் பெண்ணை கேலி செய்துள்ளார். இதைபார்த்த எஸ்ஐ சதிஷ், கோயிலுக்கு வந்த இடத்தில் பெண்களிடம் இப்படியா நடந்து கொள்வது என்று சத்தம்போட்டுள்ளார். இது இசக்கிபாண்டிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே தந்தை மற்றும் உறவினர்கள் என 8 பேர் சேர்ந்து எஸ்.ஐ சதீஷ் மற்றும் ஏட்டு தர்மேந்திரபாண்டியன் ஆகியோரை சுற்றிவளைத்தனர். அதோடு அவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்க முயற்சித்தனர்.
நிலைமை மோசமானதை அறிந்த எஸ்ஐ சதீஷ் துப்பாக்கியை எடுத்து, மரியாதையாக இங்கிருந்து ஓடிவிடுங்கள், இல்லாவிட்டால் சுட வேண்டியது வரும் என்று எச்சரித்தார். ஆனால் கும்பல் அவர்களை விடுவதாக இல்லை. இதைத்தொடர்ந்து ஏட்டு தர்மேந்திரபாண்டியன் லத்தியால் சுழற்றி அவர்களை விரட்டி அடித்தார். இதனால் கும்பல் அங்கிருந்து சிதறி ஒடியது. அதன்பிறகு எஸ்ஐ சதீஷ் போலீஸ்நிலையம் சென்று நடந்த விபரத்தை இன்ஸ்பெக்டர் சோமன்ராஜனிடம் கூறினார்.
போலீசாரை தாக்க முயன்றதாக கால்வாய் ஆறுமுகநயினார், அவரது மகன் இசக்கிபாண்டி, பண்டாரம் மகன் நம்பி, அப்பாத்துரை மகன் தேவசங்கர், உறவினர் ஆழிக்குடி மூக்காண்டி மகன் நம்பி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிந்தார்.
இதற்கிடையில் போலீசாரை முற்றுகையிட்ட கும்பல் திருவைகுண்டம் பகுதிக்கு சென்று, அங்கு சிலரிடம் வழிப்பறி செய்ய முயன்றதாகவும் தெரிகிறது. அதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. சினிமா போன்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


