சாத்தான்குளத்திற்கு திருநெல்வேலியிருந்து இரவு இயக்கப்படும் கடைசி பஸ் திடீரென விரைவு பஸ்சாக மாற்றப்பட்டதால் பல்வேறு கிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் . 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்ட பஸ்சை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலியிருந்து சாத்தான்குளத்திற்கு இரவு 10:30 மணிக்கு கடைசி பஸ் செல்கிறது. இந்த பஸ் ரெட்டியார்பட்டி, இட்டேரி, தாமரைசெல்வி, பருத்திப்பாடு, மூலக்கரைபட்டி, முனைஞ்சிப்பட்டி, பேய்க்குளம், கருங்கடல், செட்டிகுளம், சாத்தான்குளம் வழியாக பண்டாரபுரத்திற்கு சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்தது. திடீரென இந்த பஸ் விரைவுப்பேருந்தாக மாற்றப்பட்டது. இதனால் 30 ரூபாய்க்கு உள்ள கட்டணம் 38 ரூபாயாக அதிகரித்தது. மேலும் விரைவு பேருந்தாக அறிவிக்கப்பட்டதால் இட்டேரி, பருத்திப்பாடு, தாமரைசெல்வி, புளியங்குளம் போன்ற கிராமங்களில் பஸ் நிற்பதில்லை.
இதனால் இந்த பஸ்சை நம்பிய பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி பஸ் பயணி முத்துசங்கரநாராயணன் கூறியதாவது. திருநெல்வேலியிலிருந்து சாத்தான்குளத்திற்கு இரவு கடைசி பஸ் 10:30 மணிக்கு செல்லும். இந்த பஸ் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. வியாபார விஷயமாகவும், பல்வேறு வேலைகளுக்கும் சென்று வருபவர்கள் இந்த கடைசி பஸ்சை பிடித்து சாத்தான்குளம் மற்றும் வழியோர கிராமங்களில் உள்ள பயணிகள் பயனடைந்து வருகின்றன.
இந்த பஸ்சை தவறவிட்டால் மீண்டும் மறுநாள் காலை 4:15க்குத்தான் முதல் பஸ். அதுவரையிலும் பயணிகள் திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்டிலேயே காத்து கிடக்க வேண்டியிருக்கும். இதுவரையிலும் சாதாரண கட்டணத்திலேயே இயக்கப்பட்ட பஸ். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரைவு பஸ்சாக மாற்றப்பட்டதால் வழியோர கிராமங்களில் நிற்காது என கண்டக்டரால் கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதி பயணிகள் இடையில் இறக்கிவிடப்பட்டு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவர்களின் உடைமைக்கும், உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
சாத்தான்குளத்தில் புதிய பஸ்ஸ்டாண்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டு பஸ் திரும்பி விடுகிறது. புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஊருக்கு செல்ல ஒரு கிலோமீட்டர் இருட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. நாய் தொல்லையால் பஸ் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அந்த பகுதிகள் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது. இரவு தெருவிளக்குகளும் எரியவில்லை. இதனால் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக பெண் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது.
எனவே முன்பு போல இரவு நேர கடைசி பஸ்சை சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் வரை வரவேண்டும். வழியோர கிராமங்களில் முன்பு போல நின்று செல்ல வேண்டும். முன்பு வசூலித்த சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும். முன்பு போல் சாதாரண பஸ்சாக இயக்க வேண்டும் என கூறினார். இதுபற்றி போக்குவரத்து வட்டாரத்தில் கேட்டபொழுது திரு நெல்வேலி மண்டலம் மதுரையுடன் இணைக்கப்பட்டபிறகு வருவாய் பெருக்குவதற்கும் செலவை குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக 10:30க்கு இயக்கப்பட்ட 65இ சாதாரண பஸ்சை இரவு 9:30 ஆக மாற்றம் செய்துவிட்டு புதிதாக 10:30 மணிக்கு 65எம் என்ற விரைவு பஸ்சை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு வேறு மாற்று வழி கிடையாது என்பதால் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்வார்கள். இதுபோன்ற பல்வேறு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் மதுரை மண்டலத்தில் இணைத்த பிறகு நடக்கிறது. பல பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன, வழித்தடம் குறைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் ஒரு சில பஸ்களை நிறுத்தியும் விடுகிறார்கள் என கூறுகின்றனர்.